நெல்லை: அம்பாசமுத்திரம் காவல் சரக காவல் உதவி கண்காணிப்பாளராக இருந்த ஏஎஸ்பி அதிகாரி பல்வீர் சிங் விசாரணை கைதிகளின் பற்களைக் கொடூரமாகப் பிடுங்குவதாக எழுந்த புகாரில் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். இது தவிர மாநில மனித உரிமை ஆணையமும் விசாரித்து வருகிறது. ஏஎஸ்பியால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் ஒன்பது பேர் இதுவரை இந்த விவகாரத்தில் சார் ஆட்சியரிடம் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
அதில் இருவர் தவிர மீதமுள்ள ஏழு பேர் போலீஸ் அதிகாரி பல்வீர் சிங்கிற்கு எதிராக சாட்சியம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே ஏஎஸ்பி பல்வீர் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து வி.கே.புரம், கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய தனிப்பிரிவு காவலர்கள் இருவரை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்பி சரவணன் உத்தரவிட்டார். இந்த நிலையில் நெல்லை மாவட்ட எஸ்பி சரவணன் திடீரென காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் நெல்லை எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி பிறப்பித்துள்ளார்.
விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கியதாக கூறப்படும் விவகாரத்தில் எஸ்பி சரவணன் சரியான முறையில் நடவடிக்கை எடுக்காததால் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே விரைவில் ஏஎஸ்பி மற்றும் எஸ்பியிடம் மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தும் என கூறப்படுகிறது.
இந்த வழக்கில் திடீர் திருப்பமாக பல்வீர் சிங்கால் பாதிக்கப்பட்டவராகக் கருதப்படும் சூர்யா என்பவர் விசாரணைக்காக சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஆஜரான போது ’நான் கீழே விழுந்ததில் தான் பல் உடைந்தது’ எனக் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் நடந்த காவல் நிலையங்களாகக் கருதப்படும் வி.கே.புரம் மற்றும் கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய தனிப்பிரிவு காவலர்களான ராஜ்குமார் மற்றும் மோகன் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பல் பிடுங்கப்பட்ட விவகாரம் - 2 தனிப்பிரிவு போலீசார் ஆயுதப்படைக்கு அதிரடியாக மாற்றம்!