நெல்லை வண்ணார்பேட்டை கூட்டுறவு பதிவாளர் முருகேசன் தலைமையிலான பறக்கும் படையினர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் எந்தவிதமான உரிய ஆவணங்களுமின்றி, கொண்டுசெல்லப்பட்ட 8 லட்சத்து 39 ஆயிரத்து 780 ரூபாய் இருந்தது தெரியவந்தது.
வாகனத்தில் வந்தவர்கள் கயத்தாறு டோல்கேட்டில் வசூலான பணத்தை நெல்லை சந்திப்பில் உள்ள தனியார் வங்கியில் செலுத்துவதற்காக சென்று கொண்டிருப்பதாக தெரிவித்தனர்.
இதையடுத்து பணத்தை கைப்பற்றிய அதிகாரிகள் உரிய ஆவணங்களை காண்பித்து பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்தனர். பின்னர் கைப்பற்றப்பட்ட பணத்தை நெல்லையில் உள்ள அரசுக் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.