நெல்லை மாநகரில் பல்வேறு இடங்களில் இளைஞர்கள் பைக் ரேசில் கலந்து கொள்வது தொடர்கதையாகி வருகிறது. இதனை தடுக்கும் வகையில் போக்குவரத்து காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒருபகுதியாக பைக்ரேசில் ஈடுபட்ட 11 இளைஞர்களை பிடித்த திருநெல்வேலி காவல்துறையினர் அவர்களிடமிருந்து நான்கு அதிவேக பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
பின்னர் அந்த இளைஞர்களை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் எலும்பு முறிவு வார்டுக்கு காவல் துறையினர் அழைத்துச் சென்றனர். அங்கு விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வருபவர்களை காண்பித்து அவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் எத்தகைய பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள் என்பது பற்றி இளைஞர்களிடம் எடுத்துரைத்தனர். மேலும் எலும்பு முறிவு உடல்நலனில் எத்தகைய பாதிப்புகளை உண்டாக்கும் என்பதை அந்த இளைஞர்களுக்கு நெல்லை அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் விளக்கினர்.
பைக் ரேஸ் இளைஞர்களுக்கு பாடம் புகட்டுவதற்காக எடுக்கப்பட்ட நெல்லை காவல்துறையின் இத்தகைய முயற்சியை பொதுமக்கள் வெகுவாகபாராட்டினர்.