திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் உலகம்மன்கோயில் தெரு பகுதியில் கடந்த மூன்று மாத காலமாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை எனவும், கடந்த ஒரு வாரமாக குடிநீர் வழங்கல் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து தச்சநல்லூர் மண்டல உதவி ஆணையர், மாநகராட்சி ஆணையர் ஆகியோரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் பொறுமை இழந்த மக்கள் காலி குடங்களுடன் தச்சநல்லூா் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த விவகாரத்தில் உரிய தீர்வு எட்டப்படாவிட்டால் தொடர் போராட்டம் நடைபெறும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். இதனையறிந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற அப்பகுதியின் அதிமுக நிர்வாகியும், முன்னாள் தச்சநல்லூர் சேர்மனுமான மாதவனுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை.
இந்த விவகாரம் குறித்து அலுவலர்களுடன் மட்டுமே பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த மாநகராட்சி அலுவலர்கள் குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: மணல் திருட்டு - நிலத்தில் இறங்கி ஆர்ப்பாட்டம்!