திருநெல்வேலி: பத்தமடை மற்றும் புதுக்குடி பகுதிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட காட்டுநாயக்கன் சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர். இதில் 150-க்கும் மேற்பட்டோர் பள்ளிக்கல்வி பயின்று வருகின்றனர். அவர்களுக்கு உயர்கல்வி படிப்பதற்குச் சாதிச்சான்றிதழ் தேவைப்படும் நிலையில் ஆன்லைன் மூலம் வருவாய் துறையினரிடம் சாதி சான்றிதழ் கோரி விண்ணப்பம் செய்தனர்.
அவர்களது விண்ணப்பம் பலமுறை நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால், அச்சமூகத்தைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில், “எங்களது சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 150 குடும்பங்களுக்கு சாதிச்சான்றிதழ் இதுவரை வழங்கப்படவில்லை.
இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் மேற்படிப்புக்குச் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அரசு எங்களுக்கு மற்ற சமுதாயத்தினரைப் போல பல்வேறு சலுகைகளை வழங்கி வரும் நிலையில், சாதிச்சான்றிதழ் மற்றும் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. நாங்கள் தான் கல்வி கற்காமல் குப்பை அள்ளி வருகிறோம். எங்கள் குழந்தைகளையாவது படிக்கவைக்க வேண்டும். எனவே, அதனை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கூண்டுக்குள் உள்ள அம்பேத்கரை மீட்டெடுங்கள் - தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை!