திருநெல்வேலி: தமிழ் இலக்கியவாதி, பட்டிமன்றப்பேச்சாளர், எழுத்தாளர், ஆன்மிக அரசியல் சொற்பொழிவாளர், தமிழ் கடல் என அழைக்கப்பட்ட நெல்லை கண்ணன் நேற்று (ஆக 18) உடல்நலக்குறைவு மற்றும் வயோதிகம் காரணமாக உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும், தமிழ் அறிஞர்களும், இலக்கியவாதிகளும் தொடர்ந்து அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று நெல்லையில் அவரது இல்லத்தில் காலை முதலே பல்வேறு அரசியல் கட்சிப்பிரமுகர்கள், இலக்கியவாதிகள், படைப்பாளிகள், பொதுமக்கள் குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அப்துல்வகாப், நயினார் நாகேந்திரன் ஆகியோர் நெல்லை கண்ணன் இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இதனைத்தொடர்ந்து குடும்ப வழக்கப்படி இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு, பின்னர் அவரது உடல் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு நெல்லை தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள கருப்பன்துறை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: தொடர்ச்சியாக 9 மணி நேரம் கூட்டத்தில் பேசிய நெல்லை கண்ணன்.. எழுத்தாளர் நாறும்புநாதன் சிறப்பு பேட்டி