நாட்டின் 74ஆவது சுதந்திர தின விழா இன்று (ஆக. 15) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டுவருகிறது. அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டையில் உள்ள வ.உ.சி., மைதானத்தில் நடைபெற்ற 74ஆவது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் நெகிழ்ச்சியான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது தனது தந்தை இறந்த செய்தியைக் கேட்ட பிறகும் விடுமுறை எடுக்காமல் சுதந்திர தின அணிவகுப்பை தலைமை ஏற்று நடத்திய பெண் காவல் ஆய்வாளரின் கடமை உணர்வை தற்போது பலரும் பாராட்டிவருகின்றனர்.
நெல்லை மாநகர ஆயுதப்படை காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் மகேஸ்வரி, இன்று (ஆக. 15) நடைபெற்ற சுதந்திர தின விழா அணிவகுப்பை தலைமையேற்று நடத்தினார்.
இந்த சூழ்நிலையில் நேற்று (ஆக. 14) இரவு மகேஸ்வரியின் தந்தை நாராயணசாமி(84) உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.
இந்தச் செய்தியை கேட்டு மகேஸ்வரி தனது சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை புறப்பட இருந்தார்.
இருப்பினும் காவல் விதிகளின்படி அணிவகுப்பு நிகழ்வில் தலைமை ஏற்று நடத்தும் அலுவலரை திடீரென கடைசி நேரத்தில் மாற்ற முடியாது என்பதால், தனது தந்தையை இறந்த பிறகும்கூட காவல் ஆய்வாளர் மகேஸ்வரி இன்று (ஆக. 15) நடைபெற்ற அணிவகுப்பு மரியாதையை தலைமையேற்று சிறிதளவும் குறைவின்றி நடத்தி முடித்தார்.
மேலும் நிகழ்ச்சி முடியும் வரை இந்த தகவல் வெளியில் கசியாமல் பார்த்து கொண்டார். பின்னர் நிகழ்ச்சி முடிந்த உடனே மகேஸ்வரி உடனடியாக தனது சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டத்திற்கு புறப்பட்டுச் சென்றார். மகேஸ்வரியின் கணவர் பாலமுருகனும் நெல்லை மாவட்ட நுண்ணறிவு பிரிவு காவலராக பணிபுரிந்து வருகிறார்.
பொதுவாக சினிமாவில் தான் நடிகர்கள் இது போன்ற உயரிய பதவியில் இருக்கும்போது தனது தாய் தந்தை இறந்தால் அதில் பங்கேற்காமல் கடமை உணர்ச்சியுடன் பணி செய்வதை பார்க்க முடியும்.
அது போன்ற ஒரு சம்பவம் நிஜமாகவே நெல்லை மாவட்டத்தில் அரங்கேறியிருப்பது சக காவலர்கள் மத்தியிலும் அரசு ஊழியர்கள் மத்தியிலும் நெகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க...நம்பிக்கை மனிதி: பூரண சுந்தரி ஐஏஎஸ்...!