நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் அருகே உடையார்பட்டி பகுதியில் இருதய ஆண்டவர் ஆலயத்துக்குச் சொந்தமான கல்லறை தோட்டம் உள்ளது. இங்கு கடந்த 18ஆம் தேதி நள்ளிரவு அடையாளம் தெரியாத நபர்கள் புகுந்து 50க்கும் மேற்பட்ட கல்லறைகளை கடுமையாகத் தாக்கி சேதப்படுத்தினர். இச்சம்பவத்தைக் கண்டித்து ஆலயத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தச்சநல்லூர் காவல்துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், நெல்லை மாவட்ட இந்து மக்கள் கட்சியினர் இந்த தாக்குதலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் உடையார் உள்ளிட்ட எட்டு நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.
பின்னர் தச்சநல்லூர் காவலர்கள், 8 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அதற்கான ஆவணங்களை பாளையங்கோட்டை சிறையில் வழங்க உள்ளனர். அதைத்நொடர்ந்து ஏற்கெனவே சிறையில் உள்ள 8 பேரும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட உள்ளனர்.
பொதுவாக நாட்டின் பாதுகாப்பு மற்றும் இதுபோன்ற மதக்கலவரங்கள் தொடர்புடைய பிரச்னைகளில் தேசிய பாதுகாப்பு சட்டம் போடப்படும். தற்போது கல்லறைகள் சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் இந்து - கிறிஸ்தவர்கள் மத மோதல் ஏற்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
இதையும் படிங்க:கல்லறை சேதம்; ஒன்று திரண்டு போராடிய கிறிஸ்தவர்கள்!