நெல்லை மாவட்டம் நாங்குநேரி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாங்குநேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று தொடங்கியுள்ளது. இதையொட்டி, வட்டாட்சியர் அலுவலகத்திற்கு காவல் துறையினரின் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தேர்தல் நடைபெறவிருக்கும் வட்டாட்சியர் அலுவலகத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "இங்கு மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் தேர்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி, தேர்தல் உதவி அலுவலராக வட்டாட்சியர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர்களிடம் வேட்பாளர்கள் காலை 11 மணி முதல் மாலை 3 மணிவரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.
வேட்புமனு செய்பவருடன் நான்கு பேர் மட்டுமே வர வேண்டும். வட்டாட்சியர் அலுவலக வளாகத்தின் 100 மீட்டருக்குள் மூன்று வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்" எனக் கூறினார்.
இதுவரை பறக்கும் படையினரால் நடத்தப்பட்ட சோதனையில் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை. வேட்புமனு தாக்கலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது எனவும், வேட்பு மனுக்களை அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க:'நாங்குநேரி-விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு' - திருமாவளவன்