திருநெல்வேலி: நெல்லை ராமையன்பட்டியில் தமிழ்நாடு அரசின் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கான தீவன தொழில்நுட்ப மையத்தை சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு மற்றும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று (மார்ச் 15) திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார்.
இதனை தொடர்ந்து நடைபெற்ற கால்நடைகளுக்கான தீவன தொழில்நுட்பம் குறித்த விவசாயிகளுக்கான கருத்தரங்கில் பேசிய நயினார் நாகேந்திரன், "தற்போது தமிழகத்தில் கால்நடை துறையில் நடந்து வரும் மறுமலர்ச்சி ஒப்பிட்டு பார்க்க முடியாதது. 2001ஆம் ஆண்டு கால்நடை துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் தற்போது அதே துறையில் இருந்து கூடுதல் ஈடுபாட்டுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
கால்நடை மருத்துவக் கல்லூரியில் நடைபெறும் திட்டங்கள் மத்திய அரசு 60 சதவீதம், மாநில அரசு 40 சதவீதம் என இணைந்து செயல்படுத்தி வருகிறது. கால்நடை துறை முற்காலத்தில் யாராலும் ஏறிட்டு பார்க்காத ஒரு துறையாக இருந்தது. தற்போது ஆடுமாடுகள் மனித வாழ்வில் பின்னிப் பிணைந்திருக்கிறது. வரும் காலங்களில் ஆடு மாடு கோழிகள் இல்லை என்றால் விவசாயம் என்பதே இல்லாத நிலை உருவாகும். காடுகளில் உள்ள விலங்குகளை பாதுகாப்பது போன்று கால்நடைகளை பாதுகாப்பதும் தற்போதைய நிலையில் அவசியமானதாக உள்ளது" என்றார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் சபாநாயகர் அப்பாவு பேசும் போது, "கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கால்நடை ஆராய்ச்சி துறைக்கு மத்திய அரசு 100 சதவீதம் நிதி உதவி வழங்கும். தற்போது அது 60 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதனை மீண்டும் 100 சதவீதம் பாஜக எம்எல்ஏ பெற்றுத் தரவேண்டும்" என்று பேசினார்.
இதையும் படிங்க: குமரி அருகே பெரியார் படம் அவமதிப்பு: போலீஸார் விசாரணை