திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் விடுதி வசதியுடன் இயங்கும் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி ஒன்று செயல்பட்டுவருகிறது. இப்பள்ளியில் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 63 மனவளர்ச்சி குன்றிய மாணவர்கள் பயின்றுவருகின்றனர்.
இந்நிலையில், இப்பள்ளியில் பயின்றுவந்த இரண்டு மாணவர்கள் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திடீரென உயிரிழந்தனர். மேலும், நான்கு மாணவர்கள் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மர்மக் காய்ச்சலால் அடுத்தடுத்து மாணவர்கள் பாதிக்கப்படவே மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஸ் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘இரண்டு மாணவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்திருப்பதால் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மற்றபடி பள்ளியில் மாணவர்களுக்குத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. உயிரிழந்த மாணவர்களின் மருத்துவ அறிக்கை குறித்து ஆய்வு செய்யப்படும்’ என்றார்.