நெல்லை: அம்பாசமுத்திரம் பகுதியில் விசாரணைக் கைதிகளின் பல்லை உதவி காவல் கண்காணிப்பாளராக இருந்த பல்வீர் சிங் பிடுங்கிய விவகாரத்தில் தமிழ்நாட்டின் மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா உயர்மட்ட விசாரணை நடத்தி வருகிறார்.
கடந்த வாரம் திங்களன்று மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா முதல் கட்ட விசாரணையைத் தொடங்கிய நிலையில், இன்று இரண்டாம் கட்ட விசாரணையை அதிகாரி அமுதா தொடங்கினார். அப்போது இந்த விசாரணையில் பல் பிடுங்கிய விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சூர்யா என்ற இளைஞரின் தாத்தா பூதபாண்டியன் என்பவர் ஆஜரானார். அப்போது அவர் தனது பேரன் சூர்யாவைக் காணவில்லை எனக் கூறிய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியது.
சிசிடிவி கேமராக்களை உடைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட சூர்யாவின் பல்லை, பல்வீர் சிங் பிடுங்கியதால் இந்த விவகாரத்தை முதலில் காவல்துறையிடம் சூர்யா கூறினார். எனவே, பல் இல்லாத புகைப்படங்களை முதன் முதலில் சூர்யா தான் வெளியிட்டார். அதே சமயம், இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே சார் ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விசாரணையின் போது சூர்யா திடீரென பல்டி அடித்து, தனது பல்லை போலீஸ் அதிகாரி பிடுங்கவில்லை, கீழே விழுந்து தான் பல் உடைந்தன எனத் தெரிவித்தார்.
இதனால் இந்த விவகாரத்தில் திருப்பம் ஏற்பட்ட நிலையில், காவல்துறையினர் மிரட்டல் காரணமாகவே சூர்யா பிறழ் சாட்சி அளித்ததாக கூறப்பட்டது. இதுபோன்ற சூழ்நிலையில் சூர்யாவை கடந்த பல நாட்களாக காணவில்லை என அவரது தாத்தா கூறியிருப்பது காவல்துறையின் மிரட்டலை உறுதிப்படுத்திருப்பது போல் அமைந்துள்ளது.
இதுகுறித்து பூத பாண்டியன் மேலும் கூறுகையில், ’’எனது பேரன் சூர்யாவின் பல்லை பிடுங்கி விட்டனர். அவனை பல நாட்களாக காணவில்லை. வீட்டில் உள்ள பெண்களையும் போலீசார் மிரட்டி வைத்துள்ளனர். அவன் ஒருவன் தான் எங்கள் குடும்பத்திற்கு உதவியாக இருந்தான். அவனையும் இப்படி செய்துவிட்டார்கள். எனவே, எனது பேரனை மீட்டுத் தரும்படி அதிகாரியிடம் கூறுகிறேன்’’ என வேதனையோடு தெரிவித்தார்.
அதே சமயம் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட இசக்கி, முத்து, செல்லப்பா, மாரியப்பன் உட்பட 10 பேர் இன்று விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து வாக்குமூலம் அளித்தனர். இதற்கிடையில் புகாருக்கு உள்ளான ஏஎஸ்பி பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போது அவர் மீது நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பல் பிடுங்கிய விவகாரம்: பல்வீர் சிங் மீது மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு!