திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா தொற்று மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதுவரை, 3ஆயிரத்து 123 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நெல்லை மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவியாக நெல்லை மக்களவை உறுப்பினர் ஞானதிரவியம் தனது தொகுதி நிதியிலிருந்து சுமார் ₹13 லட்சம் ரூபாய் மதிப்பில் அதிநவீன ஸ்ப்ரேயர் கொண்ட டிராக்டருடன் கூடிய கிருமி நாசினி இயந்திரத்தை மாநகராட்சி ஆணையர் கண்ணனிடம் வழங்கினார்.
பின்னர் ஞானதிரவியம் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "திருநெல்வேலி மாநகராட்சி மக்கள் தொகை அதிகம் கொண்ட பகுதியாக உள்ளது. இங்கு நோய் பரவலைத் தடுக்கும் விதமாக, 13 லட்சம் ரூபாய் மதிப்பில் கிருமி நாசினி தெளிக்கும் எந்திரத்தை மாநகராட்சிக்கு வழங்கியுள்ளேன். ஏற்கனவே நெல்லை அரசு மருத்துவமனைக்கு நோய்த் தடுப்பு உபகரணங்கள் வாங்க 86 லட்சம் ரூபாய் வழங்கியிருக்கிறேன்" என்றார்.
இதையும் படிங்க: பிகார் வெள்ளம்: 7.65 லட்சம் பேர் பாதிப்பு!