திருநெல்வேலி: தேவர்குளம் அடுத்த வெங்கடாசலபுரம் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன், இவர் தனது தந்தைக்கு உதவியாக பால் வியாபாரம் செய்து வருகிறார். மகேந்திரன் அதே பகுதியைச் சேர்ந்த பிரவீணா என்பவரைக் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் அகிமா என்ற பெண் குழந்தை உள்ளது.
மகேந்திரன் அவரது வீட்டில் இருந்து ஊரின் அருகே உள்ள தோட்டத்திற்குப் புறப்பட்டுச் சென்ற நிலையில் பிரவீணாவும் அவரது குழந்தை அகிமாவும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். பிரவீணாவின் தந்தை முத்துப்பாண்டி மகளை பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்தபோது அங்குள்ள அறையில் தாய், மகள் இருவரும் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் வந்து பார்த்து தேவர்குளம் காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஒன்றை வயது மகளை கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனையும் படிக்க:தென்காசி எம்.எல்.ஏவுக்கு சொந்தமான டிராக்டர் மோதி சிறுவன் பலி!