திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள பிரசித்தி பெற்றது, பாபநாசம் பாபநாசர் கோயில். இக்கோயில் முன் பாய்ந்தோடும் வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி ஆற்றில் ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் மகாளய அமாவாசை உள்ளிட்ட நாட்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி, அவர்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம்.
அதன்படி இன்று மகாளய அமாவாசையை முன்னிட்டு, அதிகாலை முதலே நெல்லை, தென்காசி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பாபநாசத்திற்கு வந்து, தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு எள், அரிசி உள்ளிட்டவற்றைக் கொண்டு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
அதாவது மற்ற ஆடி, தை உள்ளிட்ட அமாவாசை தினங்களில் இறந்து போன அவர்களது தாய், தந்தை உள்ளிட்ட முன்னோர்களுக்கு மட்டுமே தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். ஆனால் மகாளய அமாவாசையில் மட்டுமே இறந்து போன அவரது நண்பர்கள், உறவினர்கள் உள்பட அனைவருக்கும் தர்ப்பணம் கொடுப்பது ஐதீகம் என்பதால், வழக்கத்தை விட ஏராளமானோர் தாமிரபரணி ஆற்றில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் வரும் இந்த மகாளய அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனால் பாபநாசம் கோயில் படித்துறை, மண்டபம், கோயில் வளாகம் உள்ளிட்ட பகுதிகள் பக்தர்கள் கூட்டத்தில் அலைமோதி காணப்படுகிறது. இதையொட்டி அம்பாசமுத்திரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட சுமார் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாபநாசம் பகுதி முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மகாளயா அமாவாசையின் சிறப்பு குறித்து தர்ப்பணம் கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வரும் ஆலங்குளத்தைச் சேர்ந்த தங்கராஜ் கூறும்போது, "ஆண்டு தோறும் அமாவாசையை விட மகாளய அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது. எனவே இன்றைய தினம் மதுரை, சிவகாசி, விருதுநகர் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இங்கு பொதுமக்கள் திதி கொடுக்க வருகின்றனர்.
பிற அமாவாசையின்போது அன்றைய தினம் மட்டும் பொதுமக்கள் விரதம் இருந்து, முன்னோர்களுக்கு திதி கொடுப்பார்கள். ஆனால் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் வரும் இந்த மகாளயா அமாவாசையை முன்னிட்டு, 15 நாட்களுக்கு முன்பு விரதம் இருந்து திதி கொடுப்பார்கள். 15 நாட்கள் என்பது 15 திதி ஆகும். இந்த 15 திதிகளில் மக்கள் விரதம் இருந்து முன்னோர்களை வழிபடுவதுதான் மகாளய அமாவாசையின் சிறப்பு அம்சமாகும்.
இதன் மூலம் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என கூறப்படுகிறது. மகாளய அமாவாசையில் குறிப்பிட்ட சிலர்தான் திதி கொடுக்க வேண்டும் என்ற விதிமுறை இல்லை. அனைவரும் கொடுக்கலாம்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஜெயலலிதா வாகனம் தாக்கப்பட்ட வழக்கு; ஓபிஎஸ் நீதிமன்றத்தில் ஆஜர்!