திருநெல்வேலி: தென் மாவட்டங்களில் கடந்த 16, 17 ஆகிய தேதிகளில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகள் நிரம்பியதால், தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நெல்லை மாவட்டமே கடுமையாக பாதிப்புக்குள்ளானது.
அந்த வகையில், நெல்லை மாநகர பகுதிகளான வண்ணாரப்பேட்டை, கொக்கிரகுளம், நெல்லை சந்திப்பு, மீனாட்சிபுரம், கைலாசபுரம், சிந்துபுந்துறை, டவுன் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் கடுமையாக சூழ்ந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் அவர்களின் உடமைகளை இழந்தனர்.
நெல்லை சந்திப்பு, பெரியார் பேருந்து நிலையம் பகுதியைச் சுற்றியுள்ள 500க்கும் மேற்பட்ட கடைகள், அலுவலகங்கள் உள்ளிட்டவை வெள்ள நீரால் முழ்கியது. இதனால் கடைகளில் உள்ள பொருட்கள் அனைத்தும் சேதமானது. வெள்ள நீர் வற்றிய பின்பு, தங்கள் கடைகளுக்கு சென்று பார்த்த வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.
இது குறித்து மொபைல் கடை உரிமையாளர் முகைதீன் என்பவர் கூறுகையில், “நான் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கடை நடத்தி வருகிறேன். கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிச.17) வழக்கம்போல் கடை அடைத்துவிட்டு வீட்டுக்குச் சென்று விட்டேன். அன்று கனமழை பெய்ததால், முடிந்தவரை கடையில் உள்ள பொருட்களை உயரமான இடத்தில் வைத்து விட்டுச் சென்றேன்.
ஆனால் இந்த அளவிற்கு வெள்ளம் வரும் என்று நினைத்துப் பார்க்கவில்லை. கடையை திறந்து பார்க்கையில் உள்ளே இருந்த பொருட்கள் அனைத்தும் தண்ணீரில் முழ்கி சேதம் ஆகி இருந்தது. இதனால் எனக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. என்ன சொல்வதேன்றே தெரியவில்லை, மிகவும் வேதனையாக உள்ளது.
துயரம் ஏற்படும்போது மீண்டு வருவோம் என்ற நம்பிக்கை இருக்கும். ஆனால், இத்தகைய பெரிய இழப்பை பார்க்கும்போது கஷ்டமாக உள்ளது. சுமார் 50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமாகி உள்ளது. என்னிடம் வாடிக்கையாளர்கள் சிலர் மொபைல் சரி பார்க்க கொடுத்திருந்தனர். அவர்களுக்கு இப்போது என்ன பதில் கூறுவது என்று தெரியவில்லை. சிலர் சூழ்நிலையைப் புரிந்து கொள்கிறார்கள். சிலர் மொபைலுக்கு நீங்கள்தான் பொறுப்பு என கூறுகின்றனர்.
அதேபோல், என்னை நம்பி 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். இந்த மழையால் நிலைமை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. என்னைப் போன்று பிற கடைகளைச் சேர்ந்தவர்களுக்கும் கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசு எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆத்தூர் வெற்றிலைக்கு வந்த சோதனை.. கனமழையால் சேதம்.. வாழ்வாதாரம் காக்க விவசாயிகள் கோரிக்கை!