திருநெல்வேலி: தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கடந்த வாரம் வரலாறு காணாத கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு கடும் பாதிப்புக்கு உள்ளாகியது. தொடர் மழை காரணமாக தென் மாவட்டங்களில் உள்ள பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு நம்பியார் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இந்நிலையில் மணித்தாறு அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்ததால் கடந்த வாரத்தில் ஒரே நாளில் மணித்தாறு அணை நீர்மட்டம் 28 அடி உயர்ந்தது. அதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூன்று அணைகளில் இருந்து தாமிரபரணி ஆற்றில் சுமார் 60 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது.
இது தவிர காட்டாற்று வெள்ளம் மற்றும் மழைநீர் சேர்ந்து சுமார் ஒரு லட்சம் கன அடி வரை தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் சென்றதால் மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் பெரும் வெள்ள சேதம் ஏற்பட்டது. மேலும் கடந்த 17ம் தேதி இரவு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.
இதனால் அன்றிரவு முதல் 18ம் தேதி இரவு வரை நெல்லை மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது குறிப்பாக தாமிரபரணி ஆற்றங்கரை ஓரம் அமைந்துள்ள குடியிருப்புகளை முழுவதும் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் உடைமைகள் அனைத்தையும் இழந்தனர். கடந்த 19ம் தேதியில் இருந்து மழை குறைய தொடங்கிய நிலையில் படிப்படியாக தாமிரபரணி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர் அளவும் குறைக்கப்பட்டது.
இருப்பினும் மக்கள் வெள்ள பாதிப்பிலிருந்து மீள முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று நெல்லை மாவட்டத்தில் முற்றிலும் மழைப்பொழிவு இல்லாத நிலையிலும் மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான மணிமுத்தாறு அணை தனது முழு கொள்ளளவான 118 அடியை எட்டியது.
இன்று காலை அணைக்கு சுமார் 1350 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் அணை முழுவதும் நிரம்பியதை தொடர்ந்து இன்று உபரி நீர் திறக்கப்பட்டது. முதல் கட்டமாக மணிமுத்தாறு அணையில் இருந்து இன்று மாலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 1.000 கன அடி தண்ணீரை தாமிரபரணி ஆற்றில் திறந்து விட்டனர்.
அதை தொடர்ந்து 2,000 கன அடி வரை தாமிரபரணி ஆற்றில் திறக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். எனவே, பொதுமக்கள் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டு உள்ளார்.
இதையும் படிங்க: எண்ணூர் எண்ணெய் கழிவு விவகாரம்; பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.8.68 கோடி நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவு!