திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை சமாதானபுரத்தைச் சேர்ந்தவர் ஜேம்ஸ். இவர் அங்குள்ள நடைமேடையில் தங்கிக்கொண்டு, கிடைக்கும் வேலைகளை செய்து வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர், நண்பர் ஒருவரின் உதவி மூலம் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள இருசக்கர வாகனங்களைப் பழுதுபார்க்கும் நபரிடம் ரூபாய் 7 ஆயிரம் கொடுத்து, பழைய இருசக்கர வாகனத்தை வாங்கியுள்ளார். ஆனால், சில நாள்களிலேயே வாகனம் பிடிக்காமல் போனதால் மதுபோதையில் வாகனத்தை, எங்கேயோ கொண்டுசென்று தொலைத்திருக்கிறார். பின், வாகனத்திற்கு அளித்த பணத்தைத் திரும்பத்தரும்படி வாகனத்தை விற்ற நபரிடம் சண்டையிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், காலை திடீரென்று ஜேம்ஸ் மதுபோதையில் சமாதானபுரம் பகுதியில் உள்ள செல்போன் டவர் மீது ஏறி, தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பாளையங்கோட்டை காவல் துறையினர், அவரை கீழே இறங்கி வரச் சொல்லியுள்ளனர்.
ஆனால், அதற்கு அவர், தன்னை ஏமாற்றிய நபரிடமிருந்து பணத்தை வாங்கித்தர வேண்டும் எனவும்; தனக்கு நியாயம் கிடைக்கச் செய்யவேண்டும் எனவும் கூச்சலிடத் தொடங்கினார்.
சுமார் ஒரு மணி நேரமாக அவரை மீட்க காவல் துறையினர் போராடிய நிலையில், போதை இறங்கியதும் அந்நபர் தானாகவே கீழே இறங்கி வந்ததையடுத்து உடனடியாக கைது செய்யப்பட்டார்.
அப்போதும், அவர் காவல் துறை வாகனத்தில் ஏற மறுத்துவிட்டு, தனது நண்பர் வாகனத்தில் தான் வருவேன் என சொல்லி, மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் ஜேம்ஸை அவரது நண்பர் வாகனத்திலேயே காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.
தற்போது, அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.