திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல்துறை ஆணையாளராக இருந்த ராஜேந்திரன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு சுமார் 4 மாதங்கள் ஆன நிலையில், சுமார் 4 மாதங்களாக நெல்லை மாநகர காவல்துறை ஆணையாளர் பணியிடம் காலியாக இருந்தது.
தற்போது நெல்லை மாநகர் மற்றும் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பல்வேறு கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. மேலும் ஒரே மாதத்தில் 14 கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், திருநெல்வேலி மாநகர காவல்துறை ஆணையாளராக அதிரடியான அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது.
இந்த நிலையில், பெண் ஐபிஎஸ் அதிகாரி மகேஸ்வரியை திருநெல்வேலி மாநகர ஆணையராக சமீபத்தில் தமிழக அரசு நியமித்தது. இவர் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று, டிஎஸ்பியாக தமிழக காவல்துறையில் பணியில் சேர்ந்து எஸ்பி, டிஐஜியாக பதவி உயர்வு பெற்று, வட மாவட்டங்களில் பணியாற்றி வந்தவர். தொடர்ந்து 2022ஆம் ஆண்டு ஐபிஎஸ் அந்தஸ்துக்கு பதவி உயர்வு பெற்றார்.
பின்னர் சென்னை நகர மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராக பணியாற்றி வந்த நிலையில், தற்போது தென் மாவட்டத்தில் நெல்லை மாநகர காவல்துறையின் முதல் பெண் ஆணையாளராக மகேஸ்வரி ஐபிஎஸ் நேற்று பதவியேற்றுக் கொண்டார். திருச்சியைச் சேர்ந்த இவர் பி.இ மற்றும் எம்.எஸ் (ஐடி) முதுநிலை பட்டம் பெற்றவர்.
நெல்லை மாநகர காவல்துறையின் முதல் பெண் ஆணையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் பொறுப்பேற்ற பொழுது, காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் செய்தியாளர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.