திருநெல்வேலி: ஆறாவது பொருநை நெல்லை புத்தகத் திருவிழா பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் வரும் 25 ஆம் தேதி தொடங்கி மார்ச் 7 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த புத்தகத் திருவிழாவிற்கான லோகோ வெளியிடும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் ஆட்சியர் கார்த்திகேயன் பயிற்சி உதவி ஆட்சியர் கோகுல் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு புத்தக திருவிழாவுக்கு ஆதினி என்ற பெயரிடப்பட்ட இருவாச்சி பறவை சின்ன இலச்சினையை வெளியிட்டனர். தொடர்ந்து புத்தகத் திருவிழாக்கான அழைப்பிதழை ஆட்சியர் வெளியிட எழுத்தாளர் நாறும்பூநாதன் பெற்றுக் கொண்டார். பின்னர் புத்தகத் திருவிழா குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகன சேவையை ஆட்சியர் கார்த்திகேயன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
ஆட்சியர் கார்த்திகேயன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "நெல்லை மாவட்டத்தில் இந்தாண்டு முதல் முறையாக அரசாணை வெளியிடப்பட்டு புத்தக திருவிழா நடக்கிறது. இதில் பல புத்தக நிறுவனங்கள் மற்றும் பிற துறைகள் சார்பில் 110 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. அனைவருக்குமான பன்முகத்தன்மை கொண்ட புத்தக திருவிழா என்ற கருப்பொருளை மையமாக கொண்டு புத்தக திருவிழாவை நடத்த பயிற்சி ஆட்சியர் கோகுல் பொறுப்பேற்றுள்ளார். நெல்லை பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு அரங்குகள் அமைய உள்ளன.
நெல்லை மாவட்டத்தில் அடர்ந்த மலைக்காடுகளில் காணப்படும் இருவாச்சி பறவைக்கு ஆதினி என்று பெயரிடப்பட்டு லோகோவாக பயன்படுத்தப்பட்டுள்ளது. புத்தகம் படிக்க மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். பள்ளிகள், ஆதரவற்ற இல்லங்கள் மற்றும் சிறை நூலகங்களுக்கு புத்தகங்கள் நன்கொடையாக வழங்க புத்தக பாலம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட எழுத்தாளர் குழு மூலம் நன்கொடையாக புத்தகங்கள் வழங்கலாம்.
மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல நவீன தொழில் நுட்பத்துடன் அவர்களின் அன்றாட தேவைகள் குறித்த சிறப்பு அரங்கம் அமைக்கப்பட உள்ளது. முதல் 3 நாட்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு அரங்குகள் மற்றும் பயிற்சி பட்டறைகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர பல பேச்சாளர்களின் உரை மற்றும் பட்டிமன்றங்கள் நடத்தப்படும். நெல்லை கண்காட்சி என்ற ஒரு சிறப்பு உள்ளது. இதற்கு மேலும் ஒரு சிறப்பு ஏற்படும் வகையில் இப்புத்தக திருவிழா அமையும்.
மாணவர்களுக்கு தொடர் வாசிப்பு நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். அதேபோல் இந்தாண்டு சிறுதானிய ஆண்டு என சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது. அதற்காக சிறப்பு சிறுதானிய உணவு அரங்கம் அமைத்து உணவு திருவிழா நடத்தப்படும். வழக்கமாக புத்தக திருவிழாக்களுக்கு புத்தகம் மற்றும் பேனாவை மையப்படுத்தி லோகோ தயாரிக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு வித்தியாசமான முறையில் இருவாச்சி பறவையை பயன்படுத்தி லோகோ வெளியிடப்பட்டுள்ளது.
நெல்லை மேற்கு தொடர்ச்சி மலைக்காடுகளில் அதிகம் வசிக்கும் இருவாச்சி பறவை பாரம்பரியம் இனமானது. எங்கெல்லாம் இப்பறவை இருக்கிறதோ அங்கு விதைகளை பரப்பி மலைக்காடுகள் உற்பத்திக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே அதன் பெருமையை பறைசாற்ற பாரம்பரிய இருவாச்சி புத்தக திருவிழா லோகோவாக பயன்படுத்தியுள்ளோம். தொல்லியல் ஓடுகளில் கண்டெடுக்கப்பட்ட ஆதன், ஆதினி என்ற பெயர் அடிப்படையில் லோகோவுக்கு ஆதினி என பெயரிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: கனவும்!... கடமையும்!... யார் இந்த சிங்கப்பெண் எஸ்.ஐ மீனா!