தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் இன்று நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு பகுதிகளில் சுமார் 1.30 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், ” தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றும் வகையில் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அறிவித்து வருகிறார். கரோனோ ஒழிப்பு பணியில் ஊரக வளர்ச்சித் துறையின் பங்கு மிக முக்கியமானது. கடந்த ஆட்சியில் உரிய நேரத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாததால் திமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அதன் அடிப்படையில் சில மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.
இந்த வழக்கில் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் மீதமுள்ள பகுதிக்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே தேர்தல் நடத்துவதற்கான அனைத்து பணிகளையும் மேற்கொண்டுவருகிறோம். மாநில தேர்தல் ஆணையம் அந்தப் பணியில் ஈடுபட்டுள்ளது. அரசியல் கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளனர்.
உரிய நேரத்தில் தேர்தலை நடத்தி முடிக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் உத்தரவிட்டுள்ளார். வார்டு வரையறை உள்பட அரசியல் கட்சிகளின் பல்வேறு கோரிக்கைகள் முடிக்கப்படாமல் இருந்தாலும்கூட உரிய தேதிக்குள் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
கடந்த ஆட்சியில் அனைத்து கிராமங்களிலும் குடிநீர் பிரச்னை இல்லாமல் இருந்தது போன்றும் ஏதோ கடந்த 2 மாதங்களில் திமுக ஆட்சியில் மட்டும்தான் கிராமங்களில் குடிநீர் வசதி இல்லை என்பது போன்ற தகவல்களையும் பரப்புகின்றனர். எனவே குறைகளை சரிசெய்ய போதிய கால அவகாசம் தேவை.
நிச்சயம் கிராமங்களில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி கொடுப்போம். கடந்த ஆட்சியில் ஊரக வளர்ச்சித் துறையில் பல்வேறு முறைகேடுகள் நிர்வாக சீர்கேடுகள் நடைபெற்றுள்ளன. அவை அனைத்தும் களையப்படும். தொகுதி சீரமைப்பில் ஏற்பட்ட குளறுபடிக்கு நாங்கள் பொறுப்பல்ல.
கடந்த ஆட்சியில் திமுகவினர் வெற்றி பெறக் கூடாது என்பதற்காக சில தொகுதிகளை அதிமுகவினர் அவர்களுக்கு சாதகமாக சீரமைத்துள்ளனர். அவர்களின் சதியை முறியடித்து திமுக வெற்றி பெற்றது” என்றார்.