கல்வி அறிவும் சுயமரியாதை எண்ணமும்
பகுத்தறிவுத் தன்மையுமே
தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்
-அம்பேத்கர்
கல்வி சமத்துவத்தை கற்பிக்கும் கூர்மையுள்ள அறிவாயுதம். இந்தச் சமூகத்தில் இருக்கும் பிளவுகளை உடைத்து பேசும் சிந்தனையை வளர்த்தெடுக்கிறது. குடும்ப சூழல், உரிய வழிகாட்டுதல் இல்லாததால் தற்போது வரை அடிப்படைக் கல்வி அறிவு கூட இல்லாமல் வாழ்க்கையை நகர்த்துபவர்கள் அதிகம் உள்ளனர்.
குடும்ப வறுமையால் படிப்பறிவை இழந்த பெற்றோர் தான், கடன் பெற்று தனது பிள்ளைகளை படிக்க வைக்கின்றனர். கடந்த 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 3 லட்சத்து பத்தாயிரம் பேர் எழுதப் படிக்கத் தெரியாமல், அடிப்படை கல்வி அறிவு இல்லாமல் இருப்பது தெரியவந்தது. இந்தச் சூழலை மாற்ற, அடிப்படை கல்வி அறிவை போதிக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து சமீபத்தில் "கற்போம் எழுதும் இயக்கம்" என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி கல்வி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் மூலம் இந்த திட்டம் கடந்த 29ஆம் தேதி நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு அடிப்படை கல்வி அறிவு கற்றுக் கொடுக்கப்படுகிறது.
மாநிலம் முழுவதும் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் சுமார் 4 ஆயிரத்து 200 பேர் எழுதப் படிக்கத் தெரியாமல் இருப்பது தெரியவந்தது. அவர்களது முகவரி, தொலைபேசி எண்களை சேகரித்து 'கற்போம் எழுதுவோம்' இயக்கத்தில் சேர்ந்து அடிப்படை கல்வி அறிவை பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.
அதன் மூலம் கல்வி கற்க ஆர்வமுள்ளவர்களுக்கு முதல் நாள் வகுப்பு நவம்பர் மாதம் 29ஆம் தேதி தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது. பொதுமுடக்கத்தால் பள்ளிகள் இயங்காத நிலையில், அரசுப் பள்ளிகளில் கற்போம் எழுதுவோம் இயக்கம் திட்டத்தில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
நாள்தோறும் காலை பத்து மணி முதல் மாலை 5 மணி வரை இரண்டு மணி நேரம் ஆசிரியர்கள் வகுப்பு எடுத்து வருகின்றனர். இந்த 'கற்போம் எழுதுவோம்' இயக்கத்தில் ஆசிரியர்களோடு தன்னார்வலர்களும் இணைந்து பாடம் கற்பித்து வருகின்றனர். நெல்லையில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இந்தத் திட்டத்தில் இணைந்துள்ளனர்.
பத்தாம் வகுப்பில் தொடங்கி கல்லூரி படிப்பை முடித்த பலரும் ஆர்வத்துடன் வந்து படிக்கத் தெரியாத பாமர மக்களுக்கு கல்வியை போதித்து வருகிறார்கள். 30 வயது முதல் 50 வயதுக்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் சிறு குழந்தை போல கல்வி கற்க ஆர்வமாய் வருகின்றனர். இவர்களுக்கென்று தினசரி வருகைப் பதிவேடு, அடிப்படை கல்வி அறிவை கற்பதற்காக பிரத்யேக புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.
அடிப்படை கல்வி கற்க வந்த கொக்கிரகுளம் பகுதியைச் சேர்ந்த முப்புடாதி, எனக்குப் படிக்கத் தெரியாது, இங்கே ஆசிரியர் சொல்ற மாதிரி படிச்சா, என் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லி கொடுக்கலாம் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
சந்திரா பாட்டி, "எழுத படிக்க தெரியலை, பேங்குக்கு சென்றால் ரசீது நிரப்ப யார்கிட்டயாவது கெஞ்சனும். அதனால இங்க படிக்க வந்தேன். நேர்கோடு போட சொல்லி தர்றாங்க" என்றார்.
இவர்களுக்கு கற்றுத்தரும் தன்னார்வலர் ஆசிரியை சுகந்தி, "கற்போம் எழுதுவோம் திட்டத்துக்காக 2 நாள் பயிற்சி வழங்கினார்கள். நாங்க சம்பளம் இல்லாமல் ஆர்வத்துடன் சொல்லித் தருகிறோம்" என்றார்.
இதையும் படிங்க: வங்கிக் கடன் மோசடி: ஊழியரிலிருந்து கார் டீலர்கள் வரை செக்