திருநெல்வேலி: பணியின் போது மணலில் புதையுண்ட தொழிலாளியை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
நெல்லை மாவட்டம் உவரி பகுதியில், புதிதாக கட்டப்பட்டு வரும் வீடு ஒன்றில் கழிவுநீர் தொட்டி அமைப்பதற்காக குழி தொண்டும் பணி இன்று நடைபெற்றது. அப்போது குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த நாகர்கோவிலைச் சேர்ந்த பிரவீன் ( 25) என்னும் தொழிலாளி, திடீரென மணலில் சிக்கி கொண்டார். அந்த இடம் தேரிப் பகுதி என்பதால், பிரவீனைச் சுற்றி மளமளவென செம்மண் சரிந்து கொண்டது.
உடனடியாக இதனை கவனித்த சக தொழிலாளர்கள் தொடந்து அவர் மீது மணல் சரியாமல் இருக்க, பிரவீனை சுற்றி பிளாஸ்டிக் டிரம்மை பாதுகாப்புக்காக வைத்தனர். இது குறித்து, திசையன்விளை தீயணைப்பு மீட்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு பணி வீரர்கள் மண்ணில் புதைந்திருந்த பிரவீனை மீட்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினர். தொடர்ந்து ஜேசிபி வாகனம் கொண்டு வரப்பட்டு அதில் கயிறு கட்டி தூக்கும் முயற்சியும் நடைபெற்றது. நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தொழிலாளி பிரவீன் பத்திரமாக மீட்கப்பட்டார்.
உடனடியாக அங்கு தயார்நிலையில் இருந்த, 108 ஆம்புலனஸ் மருத்துவப்பணியாளர்கள் பிரவீனுக்கு முதலுதவி அளித்தனர். பின்னர் அவர் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்கள் நினைவு தினம்: கட்டுப்பாடுகள் தொடரும்!