திருநெல்வேலி: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சுமார் 49 ஆயிரத்து 621 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் புதியதாகக் கட்டப்படும் ஐந்து, ஆறு ஆகிய அணு உலைகளுக்கான கட்டுமானப்பணிகள் இன்று (ஜூலை 29) தொடங்கியது.
இந்த நிகழ்வில் இந்திய அணுசக்தி துறை செயலாளரும், அணுசக்தி வாரிய தலைவருமான கே.என்.வியாஸ், ரஷ்ய அணு சக்தி ஏற்றுமதி கழக இயக்குநர் அலெக்சி லிக்காசெவி ஆகியோர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்றனர்.
மேலும், ஐந்து மற்றும் ஆறாம் அணு உலைகளுக்கான திட்ட இயக்குநர் எம். எஸ் .சுரேஷ், மூன்று மற்றும் நான்காம் அணு உலைகளுக்கான திட்ட இயக்குநர் சின்ன வீரன், கூடன்குளம் அணுஉலை வளாக இயக்குநர் ராஜிவ் மனோகரன் காட் பிளே, நிலைய இயக்குநர் சுரேஷ்பாபு, கூடுதல் பொது மேலாளர் அன்புமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மின் உற்பத்தி
இந்த உலைகளில் வரும் 2027 மற்றும் 2028ஆம் ஆண்டுகளில் மின் உற்பத்தி தொடங்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலைய மின் உற்பத்தி | ||
மின் உற்பத்தி தொடங்கப்பட்ட ஆண்டு | அணு உலை | மின்சாரம் |
2013 அக்டோபர் 22 | முதல் அணு உலை | 465 மெகா வாட் |
2016 அக்டோபர் 15 | இரண்டாம் அணு உலை | 910 மெகாவாட் |
ஒரு யூனிட் மின்சாரம் நான்கு ரூபாய் 29 காசுக்கு விற்கப்படுகிறது. தற்போது முதல் அணு உலையில் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
3,4ஆம் அணு உலை பணிகள்
முன்னதாக, கடந்த பிப்ரவரி 2016ஆம் ஆண்டு மூன்று மற்றும் நான்காம் அணு உலைகளின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு, தற்போது 50விழுக்காடு பணிகள் நிறைவடைந்துள்ளன.
சுமார் 39 ஆயிரத்து 849 கோடி ரூபாயில் திட்ட மதிப்பீட்டில் இந்த உலைகள் உருவாகிவருகின்றன. இதன் மின் உற்பத்தி வருகிற 2023-2024ஆம் ஆண்டுகளில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: வருடாந்திரப் பராமரிப்புப் பணி: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்