திருநெல்வேலி: பாளையங்கோட்டை கேடிசி நகரில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் சந்திரசேகர், காங்கிரஸ் கட்சியின் 15 வட்டார தலைவர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டாக செய்தியாளர்களிடம் பேட்டியளித்தனர்.
அப்போது அவர்கள் கூறும்போது, 'நெல்லையில் 12 வட்டார பதவிகளுக்கு தேர்தல் நடத்தாமல் பணம் வாங்கி கே.எஸ். அழகிரி பதவிகளை வழங்கியுள்ளார்.
இதுதொடர்பாக முறையிட சென்ற நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சித்தொண்டர்களை கே.எஸ். அழகிரி 2000 ரூபாய் பணம் மற்றும் மது கொடுத்து அடியாட்களை வைத்து, கடந்த 15ஆம் தேதி தாக்கினார். கே.எஸ்.அழகிரிக்கும், ரூபி மனோகரனுக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. வரும் 24ஆம் தேதி சென்னையில் சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சி நடத்தும் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சி தொண்டர்களையும் அழைத்து விசாரணை நடத்த வேண்டும்.
மேலும், காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கக்கூடிய தகுதி அழகிரிக்கு அருகதை இல்லை. அவரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும். இல்லையென்றால், நெல்லை மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு ஒன்றியம், நகரம் ஆகியப் பகுதிகளில் காங்கிரஸ் கட்சித்தொண்டர்கள் போராட்டம் நடத்துவோம்.
காங்கிரஸ் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் உள்ளேயே காங்கிரஸ் தொண்டர்களுக்குப் பாதுகாப்பு இல்லை. காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு உள்ளே காங்கிரஸ் தொண்டர்கள் தாக்கப்படுகிறார்கள். அதுவும் அடியாட்களைக் கொண்டு தாக்குவதால் எங்களுக்கு காங்கிரஸ் அலுவலகத்திற்கு செல்வதற்குப் பயமாக இருக்கிறது.
இதே போல ஒரு மாநிலத் தலைவர் இருந்ததே இல்லை. ஆகவே, இவரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என நாங்கள் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவவரிடம் வலியுறுத்தியுள்ளோம். மேலும், காங்கிரஸ் கட்சியில் தேர்தல் நடத்தாமலேயே தற்போது வட்டாரத் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
காங்கிரஸ் கட்சிக்கு சம்மந்தம் இல்லாமல் இருப்பவர்களிடம் அதிகமாகப் பணம் கொடுத்து உள்ளதால் அவர்கள் வட்டாரத் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்கள். இது தொடர்பாகவும் நாங்கள் மேல் இடத்தில் புகார் தெரிவிக்க உள்ளோம். காங்கிரஸ் கட்சிக்கு எதிராக செயல்பட்டவர்களுக்கு தற்போது நெல்லை மாவட்டத்தில் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதற்கு, நாங்கள் வன்மையாக கண்டனத்தைத் தெரிவிக்கிறோம்” எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: வீதியில் படித்த போட்டி தேர்வர்களுக்காக நவீன சென்டர்.. நெல்லை ஆட்சியர் அசத்தல்!