பிப்ரவரி 27ஆம் தேதி தமிழ்நாடு வரும் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியின் சுற்றுப்பயணம் குறித்து திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனியார் ஓட்டலில் மாநில காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய கேஎஸ் அழகிரி,
ஜோதிமணி கைதுக்கு கண்டனம்
"கரூரில் காந்தி சிலை விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்திய எம்பி ஜோதிமணியை காவல்துறையினர் கைது செய்தது ஜனநாயகத்துக்கு விரோதமானது. பெட்ரோல், விலை உயர்வுக்கு எண்ணெய் நிறுவனங்கள் மீது மத்திய அரசு பழி போடுவதை ஏற்க முடியாது. எண்ணெய் நிறுவனங்கள் நாட்டை ஆட்சி செய்யவில்லை அரசு தான் எண்ணெய் நிறுவனங்களை ஆட்சி செய்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் நாட்டின் பொருளாதாரம் தலைகீழாக மாறிவிடும்” என்று தெரிவித்தார்.
கிரண் பேடியை ஏன் பதவி நீக்கம் செய்தனர்?
தொடர்ந்து புதுச்சேரியில் காங்கிரசுக்கு பெரும்பான்மை இல்லாதது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, " புதுச்சேரியில் எந்த பதற்றமும் இல்லை. கிரண் பேடியை ஆளுநராக நியமித்து நான்கரை ஆண்டுகள் அரசை செயல்பட விடாமல் பாஜகவினர் தடுத்தனர். தற்போது அவரை திடீரென நீக்கியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும். கிரண்பேடி புதுச்சேரி அரசின் நடவடிக்கைகளை தடுத்தார். தமிழிசை சவுந்தரராஜன் அரசையே அப்புறப்படுத்த அனுப்பப்பட்டுள்ளார்" என்று பதிலளித்தார்.
கமலஹாசனுக்கு வாய்ப்பு இல்லை:
மேலும் பேசிய அவர், "முன்னதாக நடிகர் கமலஹாசன் எங்கள் கூட்டணியில் வந்தால் ஏற்றுக் கொள்வோம் என்று தெரிவித்தோம். ஆனால் தற்போது கூட்டணி நிறைவு பெற்றுள்ளது. எனவே அதற்கான வாய்ப்பும் இல்லை" என்று கூறினார். இதைத்தொடர்ந்து திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை இடம் ஒதுக்கப்படும் என்று கேட்டபோது, "அதை கட்சி முடிவு செய்யும்" என்று பதிலளித்தார்.
இதையும் படிங்க: 'கொங்கு மண்டலத்தில் ராகுலின் வருகை எழுச்சிகரமானதாக இருக்கும்' - கே.எஸ். அழகிரி