திருநெல்வேலி: தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் இருந்து சாகுல் ஹமீது மற்றும் அவரது மனைவி நாகூர் மீரா, மகன் மற்றும் 21/2 வயது குழந்தை ஆகியோர் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக, திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே ஆத்தங்கரை பள்ளிவாசலுக்கு நேற்று முன்தினம் சென்றுள்ளனர். சாகுல் ஹமீது அவரது மகன் மற்றும் மகளுக்கு மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செய்துள்ளனர்.
பின்னர் இரவு ஆகிவிட்டதால், தர்காவில் உள்ள திண்ணையில் குழந்தைகளுடன் படுத்து தூங்கி விட்டனர். காலையில் எழுந்து பார்த்தபோது, குழந்தையை காணவில்லை. உடனடியாக கூடங்குளம் காவல்துறையினருக்கு பெற்றோர் தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், அங்கிருந்த சிசிடிவிகளை ஆய்வு செய்தபோது, அதிகாலை 4.30 மணியளவில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை தூக்கி தோளில் போட்டு மர்ம நபர் ஒருவர் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவின் பேரில், காவல்துறையினர் தனிப்படை அமைத்து அந்த காரை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும், தென்மண்டல பகுதியில் உள்ள அனைத்து காவல் நிலையத்திற்கும் அந்த காரின் புகைப்படங்கள் மற்றும் குழந்தையின் விவரங்கள் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் நேற்று இரவு அந்த கார், தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்வது காவல்துறையினருக்கு தெரிய வந்தது. இதனையடுத்து இரவோடு இரவாக கூடங்குளம் காவல்துறையினர் தூத்துக்குடியில் முகாமிட்டு அந்த காரை தேடிய நிலையில், இன்று (ஜூலை 13) திருச்செந்தூர் அருகில் கடத்தப்பட்ட குழந்தை தனியாக நின்று அழுது கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு சென்ற காவல்துறையினர், குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் தப்பியோடிய மர்ம நபரை காவல்துறையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: Watch: இளைஞர்கள் பெட்ரோல் திருடும் சிசிடிவி காட்சி....