திருநெல்வேலி: தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து உணவுக் கழிவுகள், மக்காத குப்பை மூடைகள், மருத்துவக் கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகளை ஏற்றிக் கொண்டு வந்த லாரியை நாங்குநேரி காவல் உதவி ஆய்வாளர் ஷீபா மற்றும் போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
அப்போது வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநர், கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த சஜி (45) என்பது விசாரணையில் தெரிய வந்து உள்ளது. உடனடியாக, போலீசார் அவரை கைது செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த விசாரணையில், நாங்குநேரி பகுதியில் உள்ள பன்றி வளர்ப்பு பண்ணை ஒன்றிற்கு உணவு கொண்டு செல்வதாகவும், அனுமதி பெற்று விட்டு திருவனந்தபுரம் பகுதியில் இருந்து குப்பைகளை ஏற்றி வந்ததாகவும் ஓட்டுநர் கூறி உள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, இதேபோல் கேரளாவில் இருந்து கழிவு குப்பைகளை ஏற்றி வந்து நாங்குநேரியில் நடு சாலையில் கொட்டி வைத்து சென்றது தொடர்பாக நாங்குநேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், மீண்டும் கழிவுகளுடன் வந்த லாரி பிடிபட்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக, தொடர்ச்சியாக கேரளாவில் இருந்து கோழி உள்ளிட்ட இறைச்சிக் கழிவுகள் கொண்டு வந்து தமிழகத்தில் கொட்டும் சம்பவம் வாடிக்கையாக நடைபெற்று வருவதாகவும், தென்காசி மாவட்டம் செங்கோட்டைப் பகுதியில் அதிகளவில் இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதாகம் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
தற்போது டெங்கு உள்ளிட்ட கொடிய வைரஸ் நோய்கள் தமிழகத்தில் பரவி வரும் சூழலில், கேரளாவில் இருந்து கொண்டு வந்து கொட்டப்படும் கழிவுகளால் மேலும் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படும் என மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க:அண்ணாமலையார் கோயிலில் புரட்டாசி மாத பிரதோஷ சிறப்பு அபிஷேகம்!