திருநெல்வேலி: நெல்லை பொருநை 6-வது புத்தகத் திருவிழா பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் கடந்த 25- ந்தேதி தொடங்கியது. இந்த புத்தக திருவிழாவில் 100 க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. புத்தகத் திருவிழாவிற்கு வருகிறவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் தினமும் மாலையில் இலக்கிய விழா கலை நிகழ்சிகள் நடந்து வருகின்றன. இதில் பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று 7-வது நாள் நிகழ்வில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புத்தக கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். பின்னர் விழாவில் கலந்து கொண்டு "ஒருநாள் ஒரு புத்தகம்" என்ற நிகழ்வில் புத்தகம் தயாரித்த பார்வையற்ற மாணவர்களை பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி பாராட்டினார்.
தொடர்ந்து விழாவில் பேசுகையில், "பொருநை புத்தகத் திருவிழாவில் கலந்து கொள்வதை மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் கருதுகிறேன். நெல்லை மக்களின் இலக்கிய படைப்புகள், அவர்களின் ஆர்வம், இலக்கியம் மீது கொண்டுள்ள காதல் ஆகியவற்றால் இந்த புத்தகத் திருவிழா சிறப்பாக நடக்கிறது. இந்த உணர்வை தமிழகம் முழுவதும் எடுத்து செல்லவேண்டும் என்றே நமது முதல்வர் மாவட்டம் தோறும் புத்தகத் திருவிழாவை நடத்த உத்தரவிட்டு உள்ளார்.
இந்த நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வரும் பன்முத்தன்மையை மக்களிடம் எடுத்துக் கூறும் மையமாகவே புத்தகத் திருவிழா உள்ளது. நம் வாழ்வியல் முறையே பன்முகத்தன்மை கொண்டதாகும், பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என சொல்லக்கூடிய சமூகத்தில் பன்முகத்தன்மை இருந்து உள்ளது. இந்த சமூகம் கேட்க மறந்த கேள்விகளை முன்வைக்கும் கருவியாக இலக்கியம் உள்ளது. எது குறித்து கேள்வி கேட்க கூடாது என்று மக்களை அடிமைப்படுத்த நினைக்கும் அரசாங்கத்தை கேள்வி கேட்க தூண்டுவதாக இலக்கியம், கலை ஆகியவை உள்ளது.
உலகில் ஒவ்வொரு மூளையிலும் வாழும் மக்களின் வாழ்வியல் முறைகளை அறிந்து கொள்ள இலக்கியமும், புத்தகமும் ஆயுதமாக உள்ளது. வாழ்வியல் மாற்றங்களை அறிந்து கொள்ள ஒரே வழி புத்தங்களை படிப்பதுதான். ஒரு இனம் இலக்கியம் என்றும், கலைகள் என்றும், மனிதநேயம் என்றும் கூறும் போது எல்லா மாச்சரியங்களையும் கடப்பது தான் இலக்கியத்தை உண்மையாக வரித்துக் கொண்டு இருப்பதான் அடையாளம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அனைவருக்கும் உரிமை, சம உரிமை, சமூகநீதி, இருக்கக்கூடிய சமூகத்தை, நாட்டை நாம் மீட்டெடுக்க வேண்டும்" என்று கூறினார்.
முன்னதாக கனிமொழி எம்.பி-க்கு மாணவி ஒருவர் காபி டிக்காக்ஷனால் வரையப்பட்ட அவரது படத்தை பரிசளித்தார். அதை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட கனிமொழி மாணவியை பாராட்டினார். மேலும் மாணவர் ஒருவரும் கனிமொழிக்கு தத்ரூபமாக வரையப்பட்ட அவரது வண்ண ஓவியத்தை பரிசளித்தார்.
மேலும் இந்நிகழ்வில் முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் ஆவுடையப்பன், நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப், மாவட்ட ஆட்சியர் கார்திகேயன், உதவி ஆட்சியர் கோகுல், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜிலா சத்தியானந்த் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: வாகன தணிக்கையில் வாக்குவாதம்.. உதவி ஆய்வாளரை தாக்கிய வழக்கறிஞர் கைது!