திருநெல்வேலி மாவட்டம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அருகில் பவானி நகரைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையில் ஒப்பந்ததாரராக உள்ளார். இவர் நேற்றிரவு(ஆக்.10) தனது மனைவி, மற்றும் 3 மகள்களுடன் வீட்டின் மொட்டை மாடியில் உறங்கியுள்ளார். வீட்டின் கீழ் பகுதியில் திடீரென சத்தம் கேட்கவே அதிகாலை 2 மணியளவில் அனைவரும் கீழே சென்று பார்த்தனர்.
அப்போது வீட்டின் மெயின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து, உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பீரோ உள்ளே இருந்த 25 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. செல்வராஜ் கீழே வருவதை அறிந்து கொள்ளையர்கள் நகைகளை அவசர அவசரமாக திருடிச் சென்றுள்ளனர்.
இதையடுத்து இதுகுறித்து செல்வராஜ் பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் தடயவியல் நிபுணர்களும் நேரில் சென்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற இடத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால், குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் மோப்ப நாய் உதவியுடன் காவல் துறையினர் குற்றவாளிகளை பிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர செல்வராஜ் தனது வீட்டில் நாய் வளர்த்து வந்துள்ளார். ஆனால் அடையாளம் தெரியாத நபர்கள் நாயை விஷம் வைத்துக் கொன்று வந்துள்ளனர். அந்தவகையில் இதுவரை 15க்கும் மேற்பட்ட நாய்கள் வளர்த்ததாகவும், அவை அனைத்தையும் அடையாளம் தெரியாத நபர்கள் விஷம் வைத்து கொன்று விட்டதாகவும் செல்வராஜ் கூறியுள்ளார்.
மேலும் செல்வராஜ் நகைகளை வங்கியில் வைத்து கடன் பெற்றுள்ளார் என்றும், சில தினங்களுக்கு முன்புதான் நகைகளை மீட்டு வீட்டில் வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பெட்ரோல் பங்கில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற இளைஞர் கைது