திருநெல்வேலி: பாளையங்கோட்டை சங்கர் காலனியைச் சேர்ந்த அப்துல் காதர் என்பவர் மிலிட்டரி லைன் சர்ச் அருகில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் அப்துல் காதரின் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் சுரேஷ் குமார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், சாத்தான்குளம் கொலை வழக்கு ஒன்றில் அப்துல் காதருக்குத் தொடர்பு இருப்பதாகவும் அதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில் நெல்லை அம்பாசமுத்திரம் அருகே பிரம்மதேசத்தில் தங்கபாண்டி என்பவரும் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே மேலச்செவலைச் சேர்ந்த சங்கர சுப்ரமணியம் என்பவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சரமாரியாக வெட்டி கொலைசெய்யப்பட்டார்.
இச்சம்பவத்துக்குப் பழிக்குப்பழியாக பிராஞ்சேரியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரும் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.
இதன்மூலம் நெல்லை மாவட்டத்தில் கடந்த மூன்று நாள்களில் அடுத்தடுத்து நான்கு கொலை சம்பவங்கள் அரங்கேறியிருப்பது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது. இந்தச் சூழ்நிலையில் அடுத்தடுத்து நடைபெற்றுவரும் இந்தக் கொலை சம்பவத்தால் காவல் துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உளவுப்பிரிவு காவல் துறையினர் பணியில் அலட்சியமாக இருப்பதன் காரணமாகவே நெல்லையில் அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் நடைபெற்றுவருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் வீட்டில் அள்ள அள்ள குறையாத பணம்!