திருநெல்வேலி: நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில், சார் ஆட்சியர் கிருஷ்ணமூர்த்தி, மாநகர காவல் ஆணையர் செந்தாமரைக்கண்ணன், நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபு மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். கரோனா பரவல் காரணமாக நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. காவல்துறை, பிற துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள், அவர்களது குடும்பத்தினர் மட்டும் பங்கேற்றனர்.
சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு ஆட்சியர் நற்சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். பின்னர் பல்வேறு துறைகளின் சார்பில் 18 பயனாளிகளுக்கு 35 லட்சத்து 5ஆயிரத்து 755 ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கரோனா காலத்தில் மாநகராட்சி தகன மேடையில் பணிபுரிந்து வரும் ஊழியர்களைப் பாராட்டி ஆட்சியர் சான்றிதழ் வழங்கினார். அதைத் தொடர்ந்து எளிய முறையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதையும் படிங்க: 75ஆவது சுதந்திர தினம்: கோயம்புத்தூர் தியாகிகளின் வாரிசுகள் கருத்து!