திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தொகுதியில், அமமுக கூட்டணி சார்பில் எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் முபாரக் போட்டியிடுகிறார். இன்று அவருக்கு ஆதரவாக பச்சைத் தமிழகம் கட்சித் தலைவரும் அணுஉலை எதிர்ப்பாளருமான சுப உதயகுமார் பாளை பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், "கரோனாவால் பாதிக்கப்பட்டு மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருந்தபோது நலத்திட்டங்கள் செய்ய முன்வந்த எவரும், தொற்றால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்கவோ, இறந்த உடல்களை அடக்கம் செய்யும் பணிகளிலுமோ முன்வரவில்லை. அப்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் சடலங்களை, தன் உயிரையும் பொருட்படுத்தாமல் அடக்கம் செய்த கட்சி எஸ்டிபிஐ.
எந்தப் பெரிய கட்சியும் கரோனா காலகட்டத்தில் உதவாத போது, மக்களுக்காக போராடியவர்கள் இந்தக் கட்சியினர். ஆனால், அவற்றை மறந்து பணத்துக்காக வா்ககுகளை விற்று விலை போனால் பெரிய கட்சிகளுக்கு அடிமையாகிப் போவீர்கள்.
நாங்கள் உள்ளூர் வேட்பாளர். எங்களுக்கு வாக்களித்தால் திட்டங்கள் அனைத்தும் சட்டப்பேரவையில் நிறைவேற்றுவோம். இல்லையெனில் தாங்கள் சட்டையைப் பிடித்து எங்களிடம் கேள்வி எழுப்பலாம்" என்றார்.