திருநெல்வேலி : களக்காடு அடுத்த மலையடிப்புதூர் கிராமத்தைச் சேர்ந்த சேர்மன் கமலா தம்பதியின் மகன் இசக்கிமுத்து (25).
வேளாண் பாடப்பிரிவில் டிப்ளமோ படித்த இசக்கிமுத்து சக மாணவர்களைப் போல் படிப்பு முடிந்தவுடன் தனியார் மருந்து நிறுவனமொன்றில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
விவசாயத்தை பாதுகாக்க தேனீ வளர்ப்பு:
அப்போது அங்கு விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் அனைத்து உரங்களும் ரசாயனம் கலந்து விவசாயத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடிய உரங்கள் என்பதை அறிந்து இசக்கிமுத்து வேதனை அடைந்துள்ளார்.
இதையடுத்து வேலையைத் துறந்துவிட்டு விவசாயத்தைப் பாதுகாக்க ஏதாவது ஒரு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று இசக்கிமுத்து எண்ணியுள்ளார். அப்போதுதான் விவசாயத்தின் ஆணிவேரான தேனீக்களை வளர்ப்பதன் மூலம் விவசாயத்தைப் பாதுகாப்பதில் பங்களிப்போடு வருமானமும் ஈட்டலாம் என்று இசக்கிமுத்து திட்டம் தீட்டியுள்ளார்.
இதற்காக அவர் திருநெல்வேலி மற்றும் மதுரையில் மத்திய அரசு வழங்கும் தேனீ வளர்ப்புப் பயிற்சியில் கலந்துகொண்டு தனது ஆர்வத்தை அதிகப்படுத்தி உள்ளார். பின்னர் திட்டமிட்டபடி தனது சொந்த கிராமத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் தோட்டத்தில் ரூ.60 ஆயிரம் முதலீட்டில் தேனீ வளர்ப்பு தொடங்கியுள்ளார்.
ஆரம்பத்தில் வெறும் 30 கூடுகளைக் கொண்டு தேனீ வளர்க்கத் தொடங்கியுள்ளார், பின்னர் நாளடைவில் ஆர்வம் அதிகரிக்க அதிகரிக்க தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது 400க்கும் மேற்பட்ட தேன் கூடுகளில் தேனீ வளர்த்து அதிக லாபம் ஈட்டி வருகிறார்.
தமிழ்நாடு முழுவதும் விற்பனை:
கூடுகளில் இருந்து எடுக்கப்படும் தேனை சுத்திகரித்து பின்னர் தனது வீட்டில் அந்த தேனைப் பதப்படுத்தி பாட்டில்களில் நிரப்பி தமிழ்நாடு முழுவதும் இணையதள உதவியோடு விற்பனை செய்து வருகிறார் இசக்கிமுத்து.
ஒரு கிலோ தேனை ரூ.600க்கு விற்பனை செய்கிறார், தான் பயன்படுவதோடு மட்டுமல்லாமல் இச்சமூகமும் தேனீ வளர்ப்புத் தொழிலை பயன்படுத்தி அதிக வருமானம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கில் இசக்கிமுத்து தங்கள் பகுதியை சேர்ந்த இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் மாணவர்களுக்கு இலவசமாக தேனீ வளர்ப்பு பயிற்சியும் அளித்து வருகிறார்.
இதையறிந்த விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் இசக்கிமுத்துவின் தேனீ வளர்ப்பு பண்ணைக்கு வந்து பயிற்சி எடுத்து செல்கின்றனர். மெல்ல மெல்ல தனது தொழிலை மேம்படுத்தி தற்போது சென்னை வரை தேன் விற்பனையைக் கொண்டு சென்றுள்ளார். குறிப்பாக சென்னையில் மாடி தோட்டம் வைத்துள்ளவர்கள், இசக்கிமுத்துவைத் தொடர்புகொண்டு தேனீ வளர்ப்பு பயிற்சி அளிக்கும்படி கேட்கின்றனர்.
அவர்களுக்கு இசக்கிமுத்து கையோடு தேன் கூடுகளையும் இங்கிருந்து எடுத்துச் சென்று தேன் கூடுகளை வைத்து கொடுப்பதுடன் தேனீக்கள் வளர்ப்பு குறித்த பயிற்சியையும் அளித்து வருகிறார். இசக்கிமுத்துவின் விடாமுயற்சியாலும் தொழில் மீது ஏற்பட்ட ஆர்வத்தாலும் தற்போது சொந்தமாக 2 நான்கு சக்கர வாகனங்கள் வாங்கி தொழில் செய்யும் அளவுக்கு முன்னேற்றம் அடைந்து உள்ளார்.
மாதம் ரூ.80 ஆயிரம் வரை வருமானம்:
மேலும் இந்த தேனீ வளர்ப்பு மூலம் மாதம் 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை சம்பாதிப்பதாகவும் இசக்கிமுத்து பெருமையுடன் தெரிவிக்கிறார். இது குறித்து இசக்கிமுத்து நம்மிடம் கூறுகையில், ”படித்து முடித்தவுடன் மருந்து நிறுவனத்தில் வேலை பார்த்தேன் அங்கு ரசாயன உரங்கள் வழங்கப்படுவதை அறிந்து வேதனை அடைந்தேன். விவசாயத்தை பாதுகாக்கும் வகையில் அதற்கு அடிப்படை தேவையான தேனீக்களை வளர்க்க தொடங்கினேன்.
தேனீக்கள் மூலம் தான் அனைத்து செடி மரங்களிலும் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது. தேனீ வளர்ப்பில் பல்வேறு சவால்கள் இருக்கின்றன. குறிப்பாக தேன் கூடுகளை 10 நாள்களுக்கு ஒரு முறை கட்டாயம் பராமரிக்க வேண்டும், இல்லையென்றால் ஒருவகையான புழுக்கள் தேன் தட்டுகளை அரித்து விடும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன்,ஜூலை,ஆகஸ்ட்,செப்டம்பர் என நான்கு மாதங்கள் பூக்களில் தேன் இருக்காது.
எனவே அந்தச் சமயத்தில் தேனீக்களுக்கு உணவு அளிக்க தேன் கூடுகளில் சர்க்கரை கரைசல் கட்டாயம் வைக்கவேண்டும். அப்போதான் தேனீக்களை காப்பாற்ற முடியும். விவசாயிகள் மற்றும் படித்து முடித்துவிட்டு வேலை இல்லாத இளைஞர்களுக்கு இலவசமாக தேனீ வளர்ப்பு பயிற்சி அளித்து வருகிறேன்.
3 ஆண்டுகளில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி அளித்துள்ளேன். நான் மட்டுமல்லாமல் அனைவரும் இந்த தேன் வளர்ப்பு தொழிலை கற்றுக் கொள்ள வேண்டும். அரசு தேனீ வளர்ப்பு தொழிலுக்கு மானியத்துடன் கூடிய கடன் வழங்குகின்றனர்” என்றார்.
படித்து முடித்தவுடன் என்ன செய்யலாம் என்ற திட்டமிடல் இல்லாமல் தடுமாறும் இளைஞர்களுக்கு மத்தியில் தேனீ வளர்ப்பு தொழிலில் சாதனை புரியும் இளைஞர் இசக்கிமுத்துவின் செயல் பாராட்டுக்குரியதே.
இதையும் படிங்க:Tirunelveli:பொங்கல் விடுமுறையை முடித்துவிட்டு வெளியூருக்கு படையெடுக்கும் மக்கள்