திருநெல்வேலி: பாளையங்கோட்டை மறை மாவட்ட பொன்விழா நிறைவு கொண்டாட்ட நிகழ்வை முன்னிட்டு பாளையங்கோட்டை தூய சவேரியார் பள்ளி மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது அவர் பேசும் போது, "சனாதனம் என்பது இந்துக்களுக்கு எதிரானதாகும், நான்கு சதவீதம் பேர் மட்டுமே சனாதனம் மூலம் பயன்பெற்று வருகின்றனர். மீதமுள்ள 96 சதவீதம் பேர் அடிமை வாழ்க்கை தான் வாழ்கின்றனர். இந்த நாட்டில் சமூக நீதிக்கு முதலில் வித்திட்டவர்கள் அருட்தந்தையர்கள் தான்.மணிப்பூரில் 300 தேவாலயங்கள் இடிக்கப்பட்டது. இயேசு சபை அனைவருக்கும் கல்வி கொடுப்பதால் தான் சனாதனம் அதைத் தடுக்கிறது. எனவே தான் தமிழகத்தில் முதல்வர் உட்பட அனைவரும் சனாதனத்தை எதிர்க்கின்றனர்" என்று தெர்வித்தார்.
ஏற்கனவே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்தைத் தொடர்ந்து சனாதனம் என்பது மத ரீதியாக இந்து மதம் சார்ந்தது என்றாலும் அதன் நடவடிக்கை இந்துக்களுக்கே எதிராக இருப்பதாகத் திராவிட இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் திட்டவட்டமாக கூறி வருகின்றனர். இது போன்ற சூழ்நிலையில், கிறிஸ்தவ நிகழ்ச்சியில் பங்கேற்ற சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, சனாதனம் 4 சதவீதம் பேருக்கு மட்டுமே பயன்படுவதாகக் கூறிய கருத்து பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.
குறிப்பாக அப்பாவு சனாதனம் குறித்துப் பேசிய அதே நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாஜக மாநில துணைத் தலைவரும் திருநெல்வேலி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் பங்கேற்றார். எனவே பாஜகவின் முக்கிய பிரமுகரை மேடையில் வைத்துக்கொண்டே சபாநாயகர் சனாதனம் குறித்து கடுமையாக விமர்சித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சபாநாயகர் அப்பாவு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து முன்னணி சார்பில் அதன் மாநிலச் செயலாளர் குற்றாலநாதன் தலைமையில் நிர்வாகிகள் நேற்று (செப் 13) பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அதில், "பாளையங்கோட்டை மறைமாவட்ட பொன்விழா ஆண்டு விழாவில் சபாநாயகர் அப்பாவு சனாதனம் குறித்து பொய்யான செய்திகளை கூறி இந்து மதம் குறித்து இழிவாகப் பேசி, இருதரப்பினர் இடையே கலவரம் மூட்டும் வகையிலும் நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் கெட்ட எண்ணத்தோடு பேசியுள்ளார்.
அவர் பேசிய கருத்தை முன்னிலைப்படுத்தி இஸ்லாமிய அமைப்புகளும் சமூக வலைத்தளத்தில் இந்து மதத்தை இழிவு படுத்திப் பேசி வருகின்றனர். எனவே மத வெறுப்புணர்வோடு பேசிய சபாநாயகர் அப்பாவு மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மனுவில் வலியுறுத்தி உள்ளனர்.
சனாதனம் விவகாரத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "தமிழகத்திற்கு நீர் தர மறுப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயல்" - அமைச்சர் துரைமுருகன்