திருநெல்வேலி: தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. ஏற்கனவே நெல்லையின் மேற்குதொடர்ச்சிமலைப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாகவே மிதமான மழை பெய்து வருகிறது.
அதேபோல், நெல்லை நகர் பகுதிகளிலும் அவ்வப்போது மிதமான மழை பெய்து வரும் சூழலில், மேற்குதொடர்ச்சிமலைப் பகுதியில் நேற்று (ஜன.05) இரவு விடிய விடிய பலத்த மழை பெய்தது. குறிப்பாக மாஞ்சோலை தேயிலைத் தோட்டப் பகுதிகளான காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது. மேலும் அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, பாபநாசம் போன்ற பகுதிகளிலும் மிதமான மழை பெய்துள்ளது.
அதிகபட்சமாக மாஞ்சோலை அடுத்த காக்காச்சியில் 10 செ.மீ மழை பதிவானது. மேலும், மாஞ்சோலை அடுத்த நாலுமுக்கு பகுதியில் 9 செ.மீ மழையும், மாஞ்சோலையில் 8 செ.மீ மழையும், ஊத்து பகுதியில் 4 செ.மீ மழையும், மணிமுத்தாறில் 2 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. மேலும், நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் பாபநாசம், காரையாறு, மணிமுத்தாறு போன்ற அணைகளுக்கு வரும் நீர்வரத்தும் அதிகரித்துள்ளது.
143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை, ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டிய நிலையில், அணைக்கு தற்போது வினாடிக்கு ஆயிரத்து 273 கன அடி தண்ணீர் வருகிறது. எனவே ஆயிரத்து 524 கன அடி தண்ணீர் உபரி நீராக வெளியேற்றப்படுகிறது. அதேபோல், 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையும், ஏற்கனவே முழுக் கொள்ளளவை எட்டிய நிலையில், நீர்மட்டம் தற்போது 114 அடியாக உள்ளது.
மேலும், அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 962 கன அடி தண்ணீர் வரும் நிலையில், ஆயிரத்து 560 கன அடி தண்ணீர் உபரி நீராக தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. குறிப்பாக, மணிமுத்தாறு அணைக்கு நேற்று 520 கன அடி தண்ணீர் மட்டுமே வந்த நிலையில், இன்று (ஜன.06) ஒரே நாளில் நீர்வரத்து சுமார் 2,500 கன அடியாக அதிகரித்துள்ளது.
இதன் மூலம் தாமிரபரணி ஆற்றில் தற்போது சுமார் 3 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் செல்வதால், கரையோரம் வசிக்கும் மக்கள் கவனமாக இருக்கும்படி நெல்லை, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் பெய்த தொடர் மழையால், தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டு மக்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
அந்த வகையில், தற்போதுதான் கடும் வெள்ள பாதிப்புக்குப் பிறகு நெல்லை, தூத்துக்குடி மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், நீர் பிடிப்பு பகுதிகளில் மழை நீடித்து வருவதால், தாமிரபரணி ஆற்றில் அவ்வப்போது வெள்ளம் அதிகரித்து வருகிறது.
இதையும் படிங்க: தச்சங்குறிச்சியில் துவங்கியது முதல் ஜல்லிக்கட்டு போட்டி!