தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் வளிமண்டலத்தில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சியால் பல்வேறு மாவட்டங்களில் மூன்று நாட்கள் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது .குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு செய்தது.
அதன்படி நேற்று நள்ளிரவு நெல்லை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. நெல்லை மாநகர், பாளையங்கோட்டை, நெல்லை ஜங்சன், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட நகர் பகுதிகளிலும் பாபநாசம், சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் விடிய விடிய மிதமான மழை பெய்தது.
அவ்வபோது சில நிமிடங்கள் கன மழையும் கொட்டி தீர்த்தது. நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை பருவமழை தொடங்கியிருந்தாலும்கூட போதிய மழை பெய்யாமல் வெப்பமான சூழ்நிலை காணப்பட்டது.கடந்த சில வாரங்களாக பகல் நேரங்களில் அதிக வெப்பம் மக்களை வாட்டி வதைத்து வந்தது.
இந்த சூழ்நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென பெய்த மழையால் நெல்லை மாவட்டம் முழுவதும் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. தொடர்ந்து தற்போது வரை நெல்லை மாநகர் பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் வேலைக்கு செல்வோர் குடை பிடித்தபடி சாலைகளில் சென்றனர்.
இன்று காலை நிலவரப்படி நெல்லை மாவட்டம் முழுவதும் 125 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது