நெல்லை: மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான விஷ்ணு தலைமையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் பேசிய பேசிய மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, “தேர்தல் தேதி வெளியிடப்பட்ட நாளில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் பின்பற்றப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்க திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம் உள்ளிட்ட 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக்குழு 24 மணி நேரமும் செயல்படும். மாவட்டம் முழுவதும் 15 பறக்கும் படை குழுக்களும், 15 நிலையான கண்காணிப்பு குழுக்களும் தற்போது கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் அனைத்து ஆயுத உரிமையாளர்களும் தங்களது துப்பாக்கியை அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். வரும் 4ஆம் தேதிக்குள் ஆயுத உரிமையாளர்கள் அனைவரும் தங்களது துப்பாக்கிகளை தங்கள் வசிப்பிடத்தின் அருகில் உள்ள காவல் நிலையத்தில் பாதுகாப்பாக ஒப்படைத்து, உரிய ஒப்புதல் சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும். தேர்தல் முடிவுகள் வெளியான தினத்திலிருந்து ஒரு வாரத்திற்குப் பின்னர் தமது துப்பாக்கிகளை மீண்டும் திரும்பப் பெற்று கொள்ளலாம்” என்றார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர், 5 சட்டப்பேரவை தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க : தேர்தல் விதிமுறைகளை அரசியல் கட்சிகள் முறையாக பின்பற்ற வேண்டும்!