திருநெல்வேலி: கன்னியாகுமரி மாவட்டம் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கப்பன் (73). அரசுப் பள்ளி தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற இவர் எம்.ஏ. வரலாறு, பி.எட். ஆகிய படிப்புகளை முடித்துள்ளார்.
இந்நிலையில் உயர் கல்வியின் மீதும் காந்திய கொள்கைகள் மீதும் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக தனது 65 வயதில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வரலாறு பாடத்தில் பி.ஹெச்.டி. படிப்பைத் தொடங்கியுள்ளார்.
தொடர்ந்து, இன்றைய பயங்கரவாத உலகத்திற்கு காந்திய தத்துவம் எவ்வாறு பொருத்தமானது என்ற தலைப்பில் எட்டு ஆண்டுகளாக முதியவர் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். இறுதியாக 2018ஆம் ஆண்டு பி.ஹெச்.டி. படிப்பை முடித்துள்ளார்.
கரோனா காரணமாக தங்கப்பனுக்கு பி.ஹெச்.டி. பட்டம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்தச் சூழ்நிலையில் நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழகத்தில் இன்று (டிசம்பர் 15) பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
அப்போது தங்கப்பன் ஆளுநர் ஆர்.என். ரவி கையால் பி.ஹெச்.டி. பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில், "நான் வெறும் பட்டத்துக்காகப் படிக்கவில்லை.
காந்தியின் கொள்கை என்னை மிகவும் கவர்ந்தது. வரும் தலைமுறையினரும் காந்தி கொள்கையைப் பின்பற்றி அகிம்சை, அன்பு வழியில் பயங்கரவாதம் இல்லாத நாட்டை உருவாக்க வேண்டும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: டெல்டா மற்றும் உள் மாவட்டங்களில் மிதமான மழை