திருநெல்வேலி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திற்கு அதன் மாநில செயலாளர் முத்தரசன் இன்று (அக்.24) வருகை தந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது, "விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பெண்கள் குறித்து இழிவாக பேசியதாக கூறி அவர் மீது சென்னை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதை வன்மையாக கண்டிக்கிறோம். அவர் பெண்களை இழிவுபடுத்தி கூறவில்லை. மனு நீதியில் குறிப்பிடப்பட்டதை தான் அவர் கூறினார்.
மூத்த கம்யூனிஸ்ட் நிர்வாகி நல்லகண்ணு மீது சமூக வலைதளங்களில் இழிவாக பேசியபோது இதே காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்யவில்லை. மருத்துவ படிப்பில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு செய்யும் விவகாரத்தில் ஆளுநர் தொடர்ந்து மௌனம் சாதிப்பது கண்டிக்கத்தக்கது.
இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தரப்பில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறோம். இருப்பினும் அரசு இந்த விவகாரத்தில் ஆளுநருக்கு அரசியல் ரீதியான நிர்பந்தத்தை கொடுக்க வேண்டும். குறிப்பாக, அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட அரசு முன்வர வேண்டும். வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக உடனான கூட்டணி தொடரும்.
வேளாண் சட்டத்திருத்த மசோதா உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசு மக்களுக்கு இழைக்கும் அநீதியைக் கண்டித்து நவம்பர் 26ஆம் தேதி மண்டல பொதுக்கூட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆளுநருக்கு எதிராக சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தைக் கூட்ட வேண்டும் : பிரின்ஸ் கஜேந்திரபாபு