திருநெல்வேலி: பாளையங்கோட்டை அடுத்த கேடிசி நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் கோயில் பிச்சை. இவரது மனைவி உஷா (50). இவர்களுக்கு நீனா (23), ரீனா (20) என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.
கோயில் பிச்சை மனநலம் பாதிக்கப்பட்டு குடும்பத்தை விட்டுப் பிரிந்துசென்றுள்ளார். அவரது இரண்டு மகள்களும் சமீபத்தில் மனநலம் பாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
உஷா தனி ஆளாக மனநலம் பாதிக்கப்பட்ட தனது இரண்டு மகள்களையும் வளர்த்து வந்துள்ளார். இந்தச் சூழலில் இன்று (ஜூலை 20) காலை நீண்ட நேரமாகியும் உஷா வீட்டைவிட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் ஜன்னலைத் திறந்துப் பார்த்தனர்.
அப்போது உஷா ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்ததைத் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து நெல்லை தாலுகா காவல் ஆய்வாளர் சம்பவ இடத்திற்குச் சென்றார்.
அப்போது உஷாவின் மகள்கள் கை, உடலில் ரத்தக் கரை இருந்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. உஷாவின் மகள்களான நீனா, ரீனா இருவரும் சேர்ந்து தனது தாயை கம்பால் அடித்தும், கத்தியால் கழுத்தில் குத்தியும் கொலைசெய்தது தெரியவந்தது.
கொலை குறித்து காவல் துறையினர் விசாரித்தபோது, "அவள் ஒரு பிசாசு அதனால் அவளைக் கொன்றுவிட்டோம்" என இருவரும் தெரிவித்துள்ளனர். மேலும் காவலர்கள் அழைத்தபோது இருவரும் வீட்டைவிட்டு வர மறுத்துள்ளனர்.
பின்னர் காவலர்கள் பர்கர் வாங்கித்தருவதாகக் கூறிய நிலையில் இருவரும் காவல் துறையினர் வாகனத்தில் ஏறியுள்ளனர். அந்த அளவுக்கு நீனா, ரீனா இருவரும் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பது அங்கிருந்தவர்களைக் கண்கலங்கச் செய்தது.
இதையடுத்து காவல் துறையினர் உஷாவின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் அவரின் இரண்டு மகள்களையும் மீட்டு மனநல சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பாலியல் வழக்கு: சிவசங்கர் பாபாவை மூன்றாவது வழக்கில் கைது செய்ய நடவடிக்கை