திருநெல்வேலி: ஓலைச்சுவடி காலத்தில் தொடங்கி கம்ப்யூட்டர் காலம் வரை இளைஞர்கள் என்றாலே குசும்பு நிறைந்தவர்களாக இருப்பார்கள். அதிலும் கிராமத்து இளைஞர்கள் என்றால் குசும்பு சற்று அதிகமாகவே இருக்கும். தங்கள் குசும்புத் தனத்தை பொது இடத்தில் விளம்பரப்படுத்த இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாகச் சமீப காலமாகத் திருமண நிகழ்வுகளில் இளைஞர்கள் வித்தியாசமாகப் பேனரில் குசும்புத் தனமான வசனங்களையும், புகைப்படங்களையும் பதிவிட்டு மாப்பிள்ளைக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நெல்லையில் இளைஞர்கள் மது ஒழிப்பு என்ற வாசகத்தைக் கையில் எடுத்து மிகவும் குறும்புத்தனத்துடன் தங்கள் நண்பனின் திருமணத்திற்கு விளம்பரப் பேனர் வைத்துள்ள சம்பவம் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நெல்லை மாவட்டம் பள்ளமடை கிராமத்தில் காளிராஜா - பிரியா தம்பதிக்கு சில தினங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதில் மாப்பிள்ளையின் நண்பர்கள் ‘மது ஒழிப்போர் சங்கம்’ மற்றும் ‘வெட்டி விஐபி சங்கம்’ என்ற பெயரில் விளம்பர பேனர் ஒன்று வைத்துள்ளனர்.
அதில், ‘குடி குடியை கெடுக்கும் குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்’ என்ற வாசகத்தோடு தங்கள் குறும்புத்தனத்தை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர். கீழே ‘மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு’ என்று வசனத்தை பதிவிட்டு மணமக்கள் பெயரை குறிப்பிட்டுள்ளனர். அதில் நிகழ்ச்சி நிரல் என்ற பெயரில் நேரம் வாரியாக திருமணத்தில் என்னென்ன நடைபெறும் என்பதை குறிப்பிட்டுள்ளனர்.
அதிகாலை 4.30 மணிக்கு பெண் அழைப்பில் தொடங்கி நள்ளிரவு மணமக்களின் முதல் இரவு வரை நடைபெறும் விடயங்களை நகைச்சுவையுடன் பதிவிட்டுள்ளனர். அதன்படி காலை 11 மணிக்குப் பாலும் பழமும், மாலை 4 மணிக்கு பழைய சோறு, மாலை 6 மணிக்கு மாப்பிள்ளை தோழர்களின் அலப்பறை என காமெடி வசனம் சற்றே நீள்கிறது. இறுதியாக இரவு 10:30 மணிக்கு முதலிரவு 11:30 மணிக்கு மின் கம்பியை அணில் துண்டித்தல் 12:00 மணிக்கு வான வேடிக்கை என குறும்புத்தனத்தில் வானத்தின் எல்லைக்கே சென்றுள்ளனர்.
அதேபோல் பேனரில் மாப்பிள்ளை நண்பர்கள் தங்கள் புகைப்படத்தின் பின்னணியில் மது பாட்டில்கள் இருப்பது போன்றும் தங்கள் பெயருக்கு முன்பு பெக்கார்டி, அக்கார்டு, டைமண்ட் என மதுவின் பெயரை சேர்த்துள்ளனர். உச்சக்கட்ட நகைச்சுவையாகப் பேனரின் மேலே வலது புறத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு மது அருந்துவது போன்ற புகைப்படத்தையும் அச்சடித்துள்ளனர். இளைஞர்களின் இந்த நூதன பேனர் சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: ஐஸ்வர்யா ராயின் போலி பாஸ்போர்ட் உடன் பிடிபட்ட நைஜீரியர்கள்!