திருநெல்வேலி: வடக்கன் குளத்தைச் சேர்ந்தவர் பொன் சுந்தரி. இவர் வடக்கன்குளம் - ராதாபுரம் மெயின் ரோட்டில் ஸ்ரீமுத்து ஜூவல்லர்ஸ் என்னும் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் நேற்று முன்தினம் (டிச.14) அதிகாலை 1 மணி அளவில் நபர் ஒருவர் கடையின் அருகில் உள்ள ஜவுளிக் கடையின் வெளிப்பகுதியிலிருந்த மின் இணைப்பிலிருந்து மின்சாரம் எடுத்து இரண்டு கடை தாண்டியுள்ள முத்து ஜூவல்லர்ஸ் என்ற நகைக் கடையின் பூட்டை கட்டிங் மிஷின் உதவியுடன் வெட்டி கடையின் கண்ணாடியைக் கல்லால் உடைத்து உள்ளார்.
அதன்பின், கடையின் உள் பகுதியிலிருந்த லாக்கரை உடைத்து அதிலிருந்து சுமார் 29 சவரன் தங்க நகை மற்றும் 15 கிலோ வெள்ளியைப் பைகளில் எடுத்துச் சென்றுள்ளார். சுமார் 3 மணி நேரமாகக் கடையின் முன்பு, இருந்து ஆட்கள் வருவதை நோட்டமிட்டு உள்பகுதியிலிருந்து லாக்கரை உடைத்துள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் அருகே இருந்த துணிக்கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.
மேலும், இந்த நகைக் கடையானது மெயின் பஜாரில் அமைந்துள்ளது. இந்த கடையின் எதிரே 24 மணி நேரமும் செயல்படும் பெட்ரோல் பங்க் ஒன்றும் உள்ளது. சிசிடிவி காட்சியின் அடிப்படையில் பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், திருட்டில் ஈடுபட்டது ஒருவர் மட்டுமல்ல கூடுதல் நபர்கள் சேர்ந்து தான் இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. எனவே, போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்நிலையில் கோலியான்குளம் அருகே உள்ள பள்ளவிளைப் பகுதியைச் சேர்ந்த, கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட அருண், வினோத், ஜான்சன், ஷகித் ஆகிய நான்கு பேரைத் தனிப்படை போலீசார் இன்று(டிச.16) கைது செய்து, அவர்களிடமிருந்து 29 சவரன் தங்க நகை, 15 கிலோ வெள்ளி பொருட்களைப் பறிமுதல் செய்தனர். பின், விசாரணையில் நான்கு பேரும் சேர்ந்து இந்த கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது.
மேற்கொண்ட விசாரணையில், நான்கு பேரில் ஒருவர் வெல்டிங் மிஷின் மூலம் கடையின் கதவை உடைப்பதிலும், ஒருவர் கடைக்கு அருகிலிருந்து ஆட்கள் நடமாட்டத்தை நோட்டமிடுதலையும், மற்றொரு நபர் அந்த தெரு முழுவதும் இருசக்கர வாகனத்தில் வலம் வந்தபடி ஆட்களின் நடமாட்டத்தைக் கண்காணித்துள்ளனர்.
நான்காவது நபர் கடைக்குள் சென்று சர்வ சாதாரணமாக, அங்கிருந்து தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களைப் பையில் அள்ளிச் சென்றது சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. நான்கு பேரும் நான்கு திசையிலிருந்தபடி தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு கொள்ளையடித்ததாக விசாரணையில் தெரிய வந்தது.
ஏற்கனவே, இந்த நான்கு பேரும் வடக்கன் குளம் அருகே உள்ள பகுதியில் மூதாட்டி ஒருவரைக் கொலை செய்து மூதாட்டியின் நகையைத் திருடிய வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளி வந்துள்ளனர். மேலும் இந்த நான்கு பேரும் சேர்ந்து தெற்கு கள்ளிகுளம், வடக்கன்குளம் மற்றும் வள்ளியூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல நாட்களாகத் தொடர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே, அவர்களிடமிருந்து மேலும் கூடுதலாக நகைகள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நகைக்காக மூதாட்டியைக் கொலை செய்யும் அளவுக்குத் துணிந்த இது போன்ற நபர்கள் சட்டத்தைப் பயன்படுத்தி ஜாமீனில் வெளியே வந்தாலும் கூட, பொதுமக்களின் நலன் கருதி உள்ளூர் காவல்துறையினர் அவர்களின் நடமாட்டத்தைக் கண்காணித்து இருந்தால் இது போன்ற கொள்ளைச் சம்பவங்களைத் தடுத்திருக்க முடியும் எனவும், இனிவரும் காலங்களில் முன்னெச்சரிக்கையாக காவல்துறையினர் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பழனி கோயிலில் பஞ்சாமிர்த பில் விவகாரம்: இந்து அறநிலையத்துறையின் மீது மேல் முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்படும்..