திருநெல்வேலி மாவட்டம் களக்காடு மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சிங்கிகுளம் கிராமம் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தில் சில தினங்களுக்கு முன்பு கரடி ஒன்று சுற்றித்திரிந்ததை, அப்பகுதி விவசாயிகள் பார்த்துள்ளனர்.
இந்நிலையில் அந்தக் கரடி நேற்றிரவு வயல்வெளிப் பகுதிக்குள் வந்தபோது கால்புரவு என்ற இடத்திலுள்ள முத்தையாக என்பவருக்குச் சொந்தமான கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து களக்காடு –முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநர் இளங்கோ தலைமையில் வனத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர், கிணற்றுக்குள் விழுந்த கரடியை கூண்டு மூலம் பிடிக்க முயற்சித்தபோது அந்த கரடி கூண்டிற்குள் செல்லாமல் கூண்டின் மேல் ஏறி கிணற்றிலிருந்து தப்பி அருகிலிருந்த காட்டுப்பகுதிக்குள் சென்றுவிட்டது.
இதையடுத்து, சுமார் 5 மணிநேரம் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின் புதர் பகுதியில் மறைந்திருந்த கரடியை, மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பிடிபட்ட கரடியை கூண்டுக்குள் அடைத்த வனத் துறையினர், கரடியை களக்காட செங்கல்தேரி வனப்பகுதியில் கொண்டு பாதுகாப்பாக விட்டனர்.
இதையும் படிங்க: மதுக்கரை வனச்சரகத்தில் சிகிச்சை பலனின்றி கரடி உயிரிழப்பு