திருநெல்வேலி : நெல்லை டவுன் பகுதியை சேர்ந்தவர் சைமன். இவர் பழைய பேப்பர், பிளாஸ்டிக் பொருள்கள் ஆகியவற்றை மொத்தமாக சேகரித்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
இதற்காக தச்சநல்லூர் ராமையன்பட்டி அருகே பழைய பொருள்களை சேமித்து வைக்கும் குடோன் ஒன்றும் வைத்துள்ளார். இங்கு சேமித்து வைக்கப்படும் பழைய பொருள்களை பேப்பர் தனியாக பிளாஸ்டிக் கழிவுகள் தனியாக பிரிக்கும் பணி நடைபெறும்.
இந்நிலையில் இன்று (ஜன.28) இந்தக் குடோனில் பணி நடந்து கொண்டிருந்த போது கழிவுகள் வைக்கப்பட்டிருந்த அறையில் திடிரென தீ விபத்து ஏற்பட்டு தீ மளமளவென குடோன் முழுவதும் எரிந்து கரும்புகையாக காட்சியளித்தது.
இது குறித்து தகவல் அறிந்ததும் பாளையங்கோட்டை, பேட்டை தீயணையப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கடும் போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர்.
இந்த தீவிபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து டவுண் போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதும் காரணம் உண்டா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : பாளையங்கோட்டையில் 20 சவரன் நகை திருட்டு