திருநெல்வேலி:நெல்லை மாவட்டம், வண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள திருநெல்வேலி - தூத்துக்குடி மாவட்ட அரசு ஆசிரியர் மற்றும் கல்வித்துறை பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணயச்சங்க கட்டடத்தில் நேற்று (ஆகஸ்ட் 29) அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பாளையங்கோட்டை தீயணைப்புத்துறையினர் அங்கு சென்று தீயை அணைத்தனர். இந்த விபத்தில் சில ஆவணங்கள் மட்டும் தீயில் எரிந்து கருகியது தெரியவந்தது.
இதற்கிடையில் இந்த தீ விபத்தில் சந்தேகம் இருப்பதாகக்கூறி சங்கத்தின் செயலாளர் மந்திரமூர்த்தி பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் சங்கத்தலைவரே தனது மோசடியை மறைக்க ஊழியரை அனுப்பி ஆவணங்களை தீ வைத்து எரித்தது அம்பலமாகியுள்ளது. அதாவது இந்த சங்கத்தின் தலைவராக பிரபாகரன் என்பவர், கடந்த எட்டு ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு பிரபாகரன், தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு முறைகேடாக 12 லட்சம் ரூபாய் கடன் கொடுத்துள்ளார்.
மேலும் தனக்கு வேண்டப்பட்ட தினேஷ் என்பவரிடம் 3 லட்சம் ரூபாய் பணம் வாங்கிக்கொண்டு, அவரை தற்காலிக எழுத்தராகப் பணி அமர்த்தியுள்ளார். எனவே, பிரபாகரன் செய்யும் பல்வேறு முறைகேடுகளுக்கு தினேஷ் உடந்தையாக இருந்துள்ளார்.
இந்த நிலையில் விரைவில் இந்த சங்கத்தில் ஆடிட்டிங் நடைபெற இருப்பதால் தான் சங்கத்தில் மோசடி செய்த விவகாரம் வெளியே தெரிந்துவிடும் என சங்கத்தில் உள்ள நிதி வைப்பு தொடர்பான ஆவணங்களை தீ வைத்து எரித்து விடும்படி தினேஷிடம் பிரபாகரன் கூறியுள்ளார்.
இதனையடுத்து சம்பவத்து அன்று நள்ளிரவு தினேஷ் சங்க அலுவலகத்துக்குச்சென்று ஆவணங்களை தீ வைத்து எரித்துள்ளார். ஏற்கெனவே தினேஷ் மற்றும் பிரபாகரன் மீது பிற நிர்வாகிகள் சந்தேகத்தில் இருந்துள்ளனர். அதன் பேரில் போலீசார் தினேஷை பிடித்து விசாரித்த போது, தலைவர் பிரபாகரன் தான் ஆவணங்களை தீவைத்து எரிக்கும்படி கூறியதாக உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது பாளையங்கோட்டை காவல்துறையினர் இது குறித்து அரசு பொருட்களை எரித்து சேதப்படுத்துதல் சட்டப்பிரிவு 435 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து தினேஷ் மற்றும் பிரபாகர் ஆகிய இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரபாகரன் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். அரசு கூட்டுறவு சங்கத்தின் தலைவரே லட்சக்கணக்கில் மோசடி செய்துவிட்டு அதை மறைக்க தீ விபத்து நாடகம் ஆடியது நெல்லையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் இதற்கு முன்னதாக சேரன்மகாதேவியில் உள்ள அரசு ஆசிரியர்களுக்கான கூட்டுறவுசங்கத்தில் போலி ஆவணம் மூலம் பணம் கையாடல் செய்த ஆசிரியை சமீபத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஓடும் ரயிலில் பெண் காவலருக்கு கத்தி குத்து... பகிரங்க வாக்குமூலம் கொடுத்த குற்றவாளி