திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் அமைந்துள்ளது தனியார் பள்ளியில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்றுவருகின்றனர். இந்நிலையில் நேற்று (அக்டோபர் 1) பள்ளியில் பயிலும் இரு மாணவர்களுக்கிடையே சைக்கிள் நிறுத்துவதில் தகராறு ஏற்பட்டுள்ளது.
முதலில் வாக்குவாதமாக இருந்த தகராறு, கைகலப்பாக மாறியது. இது குறித்து தகவலறிந்த பாளையங்கோட்டை காவல் துறையினர் சம்பந்தப்பட்ட மாணவர்களை காவல் நிலையம் அழைத்து எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
வைரலாகும் அடிதடி காணொலி
இந்நிலையில் பள்ளியில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான காணொலி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. அந்தக் காணொலியில் இருதரப்பைச் சேர்ந்த மாணவர்கள் சரமாரியாகத் தாக்கிக் கொள்கின்றனர்.
குறிப்பாக பள்ளி எதிரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் செல்லும் சாலையில் வைத்து இந்தத் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருவருக்கு ஒருவர் கல்லால் எறிந்தும், கையால் அடித்தும் தாக்கிக் கொள்கின்றனர். பல மாணவர்கள் இந்த மோதல் சம்பவத்தை வேடிக்கைப் பார்ப்பதும் காட்சியில் இடம்பெற்றுள்ளது.
இந்த மோதலானது சாதி ரீதியான பகை காரணமாகவே மாணவர்களிடையே ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது இரு வேறு சமூகத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்களுக்கு மட்டுமே முதலில் தகராறு ஏற்பட்டுள்ளது.
பின்னர் சாதி ரீதியாக இரு மாணவர்களுக்கும் அவரவர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஆதரவளித்ததால், மோதல் பெரிதாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில் தகராறில் ஈடுபட்ட ஒன்பது மாணவர்களுக்கு இடமாறுதல் சான்றிதழ் (TC) வழங்கி பள்ளி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது.
சமீப காலமாக திருநெல்வேலியில் சாதி மோதல் காரணமாக தொடர் கொலைகள் அரங்கேறிவரும் நிலையில் பள்ளி மாணவர்கள் இடையே சாதி ரீதியான மோதல் ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கல்லூரி மாணவர்கள் மோதல் - காவலர்கள் விசாரணை!