கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இருப்பினும், ஏசியுடன் கூடிய பெரிய கடைகள் வணிக வளாகங்களுக்கு அரசு இன்னும் அனுமதி அளிக்கவில்லை.
எனவே, தென்காசியில் தடை உத்தரவை மீறி, அனுமதியின்றி செயல்படும் கடைகள் குறித்து நகராட்சி அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தென்காசி பழைய பேருந்து நிலையம் அருகே பரணி சில்க்ஸ் என்ற ஜவுளிக்கடை இன்று திறக்கப்பட்டிருந்தது. அங்கு 20க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் ஜவுளி எடுத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு சென்ற நகராட்சி அலுவலர்கள், கடை உரிமையாளரிடம் தடை உத்தரவு அமலில் இருக்கும்போது, நீங்களே இப்படி செய்யலாமா என்று கேள்வி எழுப்பினர்.
அதற்குக் கடை உரிமையாளர், இன்னும் சில நிமிடத்தில் கடையை அடைத்து விடுவேன் எனப் பதிலளித்திருந்தார்.
ஆனால், இதை ஏற்க மறுத்த நகராட்சி அலுவலர்கள், தடை உத்தரவை மீறி, உரிய அனுமதி இல்லாமல் இயங்கிய அந்த ஜவுளிக்கடைக்குச் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தது மட்டுமின்றி, ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தனர். இதைத்தொடர்ந்து தென்காசி நகராட்சியில் அனுமதி இல்லாமல், செயல்படும் கடைகளுக்குச் சீல் வைக்கப்படும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பொதுமக்களுக்கு 30 டன் அரிசி வழங்கிய எம்.பி. ஆ. ராசா!