திருநெல்வேலி: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள பாபநாசம் அருகே காரையாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வனப்பகுதியில் அமைந்துள்ளது இஞ்சுக்குழி கிராமம். இங்கு காணி பழங்குடியினத்தை சேர்ந்த ஏழு குடும்பம் 100 ஆண்டுகளாக வசித்து வருகிறது.
இந்த கிராமத்தில் மின்சாரமோ, தொலைதொடர்பு வசதிகளோ கிடையாது. அத்தியாவசிய தேவைகளுக்காக 20 கிலோ மீட்டர் வனப்பகுதியை கடந்து செல்ல வேண்டும். குறிப்பாக காரையாறு அணையை கடந்தே டவுன் பகுதிக்கு செல்ல முடியும். இதற்கு அரசு சார்பில் படகு வசதிகளும் கிடையாது. இதனால் அந்த கிராம மக்களே மூங்கில் கம்புகளால் படகை உருவாக்கி சென்றுவருகின்றனர்.
இந்த கிராமத்தில் பிறந்த ஐயப்பன் என்பவர் எப்படியாவது தனது மகளை பட்டப் படிப்பு படிக்க வைக்க வேண்டும் என்ற லட்சியத்தில் சிறு வயது முதலே தனது மகளை நகரில் தங்கி படிக்க வைத்தார். அதன்படி அவரது மகள் அபிநயா 12ஆம் வகுப்பு முடித்துவிட்டு மீண்டும் சொந்த கிராமத்திற்கு திரும்பினார். அதன்பின் கடந்தாண்டு கல்லூரியில் சேர முடிவெடுத்தார். இதற்காக பல்வேறு கல்லூரிகளில் விண்ணப்பித்தார். இவரது கிராமத்தில் தொலைதொடர்பு வசதிகள் இல்லாததால், கல்லூரி சேர்க்கை தொடர்பான விவரங்களை செல்போன் மூலமாகவோ, ஈமெயில் மூலமாகவோ அறிந்து கொள்ள முடியவில்லை.
இதன் காரணமாக கடந்தாண்டு கல்லூரியில் சேர முடியவில்லை. இந்தாண்டு எப்படியாவது மகளை கல்லூரியில் சேர்ந்து விட வேண்டும் என்ற விடா முயற்சியால் ஐயப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் தனது மகளின் கல்விக்காக இஞ்சிக்குழியில் இருந்து கீழே இறங்கி காரையார் அணை அருகே சின்ன மைலார் என்ற பகுதியில் 3 மாதங்களாக தங்கி உள்ளனர். அங்கிருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் செல்போன் சிக்னல் கிடைக்கும் என்பதால் அங்கிருந்தபடி கல்லூரி சேர்க்கை தொடர்பான விவரங்களை அறிந்து கொண்டுவந்தனர்.
இந்த நிலையிலேயே ராணி அண்ணா அரசு கல்லூரியில் அபிநயாவுக்கு இடம் கிடைத்து. சமீபத்தில் அவர் பி.ஏ வரலாறு பாடப்பிரிவில் சேர்ந்தார். இதன் மூலம் இஞ்சிக்குழியில் இருந்து கல்லூரிக்கு செல்லும் முதல் பெண் என்ற பெருமையும் பெற்றுள்ளார்.
இந்த செய்தியை ஈடிவி பாரத் ஊடகம் விரிவான தொகுப்பாக வெளியிட்டது. இந்த தொகுப்பு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதைக்கண்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஐய்யப்பனை தொடர்பு கொண்டு அவரைப் பாராட்டியதுடன் சென்னைக்கு அழைத்துள்ளார். அங்கு வந்த அவரிடம் மாணவின் அனைத்து கல்வி செலவையும் தானே ஏற்பதாக நம்பிக்கை அளித்துள்ளார்.
முதல் கட்டமாக இந்த ஆண்டுக்கான படிப்பு செலவுக்காக 30 ஆயிரம் பணத்தையும் கையோடு கொடுத்து அனுப்பி உள்ளார். அதேபோல் அபிநயா முதல்முறையாக சென்னை வந்ததால். ஒரு கார் ஏற்பாடு செய்து அபிநயாவை சென்னையை சுற்றி பார்க்க ஏற்பாடு செய்துள்ளார். இந்த நிலையில் ஈடிவி பாரத் மூலமே தங்களுக்கு இந்த உதவி கிடைத்திருப்பதாக அபிநயாவின் தந்தை ஐயப்பன் நெகழ்ச்சி உடன் தெரிவித்தார்.
இதுகுறித்து ஈடிவி நிருபரிடம் தொலைபேசியில் அவர் கூறுகையில், ”எங்கள் பகுதியில் இருந்து கல்லூரிக்கு செல்லும் முதல் மாணவி எனது மகள் தான். இதனை முதல் முதலில் உலகிற்கு அடையாளம் காட்டியது ஈடிவி பாரத் தான். ஈடிவி பாரத் மூலம் எனது மகளுக்கு கல்வி கிடைத்துள்ளது. ஈடிவி பாரத் நிறுவனத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். அதேபோல மாணவி அபிநயா கூறுகையில், ”பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எனது கல்விக்காக உதவிக்கரம் நீட்டியுள்ளார். அதற்காக ஈடிவி பாரத் ஊடகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
இதையும் படிங்க: இந்தியாவின் கல்வி முறையை தேசிய கல்விக் கொள்கை உலகளாவிய அளவுகோலுக்கு மாற்றும்