திருநெல்வேலி மாவட்டம் பாளை மூளிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் மணிராஜ்(36). மெக்கானிக்கல் இன்ஜினியரான இவர், ஓமன் நாட்டைச் சேர்ந்த ஐஸ்லன்ட் பிரிட்ஜ் என்ற கப்பல் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிகிறார். கார், லாரி உள்ளிட்ட வாகனங்கள் எடுத்துச்செல்லும் கப்பலில் பல்வேறு வெளிநாடுகளுக்கு சென்று வருவார்.
அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் கப்பலில் சென்ற மணிராஜ், திடீரென வீட்டுடன் தொடர்பு இல்லாமல் இருந்துள்ளார். அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் தனியார் நிறுவனத்திடம் விசாரித்தபோது ஏமனில் வைத்து நடுக்கடலில் அந்நாட்டு தீவிரவாதிகள் மணிராஜ், அவருடன் சென்ற மேலும் இரண்டு தமிழர்கள் உட்பட 20 பேரை சிறை பிடித்தது தெரியவந்தது.
இந்நிலையில், மணிராஜை மீட்டு தரும்படி அவரது உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் தொடர்ந்து மனு அளித்தும் கடந்த 10 மாதங்களாக அவரை மீட்க முடியாமல் தவித்தனர்.
இதற்கிடையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மூலம் ஓமன் மற்றும் ஏமன் நாட்டு தூதரக அலுவலர்களிடம் தெரிவிக்கப்பட்டு சில தினங்களுக்கு முன்பு மணிராஜ் உட்பட அனைவரும் மீட்கப்பட்டனர். அதன்பின் திருநெல்வேலி மாவட்ட மதிமுக செயலாளர் நிஜாமை சந்தித்து மணிராஜ் நன்றி தெரிவித்தார்.
பின்னர் மணிராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி கப்பலில் ஏறினேன். பிப்ரவரி 12ஆம் தேதி ஏமனில் வைத்து கடல் காற்று அதிகம் வீசியதால் பாதுகாப்பு கருதி கப்பல் கேப்டன் நங்கூரம் போட்டார். அப்போது அங்கு வந்த ஹவுதீஸ் என்ற தீவிரவாதிகள் எங்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். உடனே அவர்களிடம் நடந்ததைக் கூறினோம் எங்களை சிறை பிடித்து செனா சிட்டிக்கு அழைத்து சென்று ஒரு அறையில் பூட்டினர்.
முதலில் சாப்பாடு ஒழுங்காக தரவில்லை, ஏழு மாதங்களுக்குப் பிறகுதான் மொபைல் கொடுத்தனர். மனைவி மற்றும் எனது தந்தையிடம் போன் செய்து அழுதேன். அதன் பிறகு கட்சியினரை தொடர்புகொண்டால் மீட்டுவிடலாம் என்பதால் வைகோவிற்கு தகவல் தெரிவித்தோம். அவர் மூலம் தற்போது உயிருடன் ஊர் திரும்பியுள்ளோம். நாங்கள் பணிபுரிந்த நிறுவனம் எங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை எனவே அரசு உதவி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.